பட்டா மாறுதலுக்கு ரூ.1,000 லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர், உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
பட்டா மாறுதலுக்கு விவசாயியிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலர், உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள கொன்னையார் சத்யா நகரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 39). விவசாயி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு கொன்னையார் கிராமத்தில் வீட்டுமனை ஒன்றை வாங்கினார். இந்த இடத்தை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தரக்கோரி அப்போதைய கொன்னையார் கிராம நிர்வாக அலுவலர் மணியிடம் (54) மனு கொடுத்தார்.
ஆனால் கிராம நிர்வாக அலுவலர் மணி பட்டா மாறுதல் செய்ய ரூ.1000 லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்திரன் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அவர்களது ஆலோசனையின் பேரில் கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ந் தேதி ரசாயன பவுடர் தடவிய ரூ.1,000-ஐ சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் மணியிடம் கொடுக்க சென்றார். ஆனால் மணி தனது உதவியாளர் சங்கர் என்கிற சிவசங்கரிடம் (40) பணத்தை கொடுக்க சொன்னார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மணி மற்றும் அவரது உதவியாளர் சங்கர் என்கிற சிவசங்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாமக்கல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மணி மற்றும் அவரது உதவியாளர் சங்கர் என்கிற சிவசங்கர் ஆகிய 2 பேருக்கும் நீதிபதி கருணாநிதி தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story