மாவட்ட செய்திகள்

புயலால் அழிந்த நகரம் புத்துயிர் பெறப்போகிறது: தனுஷ்கோடியை ரசிக்க மீண்டும் அமையும் ரெயில்பாதை சுற்றுலா பயணிகள் வரவேற்பு + "||" + The city that was destroyed by storm Reii road will be back to Dhanushkodi

புயலால் அழிந்த நகரம் புத்துயிர் பெறப்போகிறது: தனுஷ்கோடியை ரசிக்க மீண்டும் அமையும் ரெயில்பாதை சுற்றுலா பயணிகள் வரவேற்பு

புயலால் அழிந்த நகரம் புத்துயிர் பெறப்போகிறது: தனுஷ்கோடியை ரசிக்க மீண்டும் அமையும் ரெயில்பாதை சுற்றுலா பயணிகள் வரவேற்பு
புயலால் அழிந்த தனுஷ்கோடி நகரம் மீண்டும் புத்துயிர் பெறப்போகிறது. அதன் அழகை ரசிக்க மீண்டும் அமையும் ரெயில் பாதைக்கான பணிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதற்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

ராமேசுவரம்,

புண்ணியதலமான ராமேசுவரம் தீவில் அமைந்துள்ளது, தனுஷ்கோடி. முன்பு வணிக நகரமாகவும், இலங்கை–இந்தியா இடையே கப்பல் போக்குவரத்து நகராகவும் விளங்கியது.

அன்றைய காலகட்டத்தில் சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தும் பாம்பன் வழியாக தனுஷ்கோடிக்கு செல்லும். பக்தர்கள் நேரடியாக தனுஷ்கோடிக்கு சென்று அங்கு பூஜை செய்த பின்னரே ராமேசுவரம் வருவார்கள். எனவே தனுஷ்கோடியும் பிரசித்தி பெற்று திகழ்ந்தது.

1964–ம் ஆண்டு டிசம்பர் 23–ந்தேதி ஏற்பட்ட கோரப்புயலில் சிக்கி தனுஷ்கோடி நகரம் முற்றிலும் அழிந்து போனது. அங்கிருந்த ரெயில் நிலையம், தபால் நிலையம், துறைமுக அலுவலகம், வழிபாட்டு தலங்கள், வீடுகள் என அனைத்தும் கடல் நீரால் அடித்துச்செல்லப்பட்டு உருக்குலைந்தன. அந்த சமயத்தில் வடஇந்தியாவில் இருந்து சுற்றுலா வந்திருந்த கல்லூரி மாணவ–மாணவிகளும் உயிரிழந்தனர். அதன் பின்னர் தனுஷ்கோடியானது, வாழ தகுதியற்ற நகராக அறிவிக்கப்பட்டதுடன் அங்கு எவ்வித சீரமைப்பு பணிகளும் நடைபெறவில்லை.

அதன்பின்பு பல ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு சாலை போக்குவரத்து கூட தொடங்கப்படவில்லை. ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் முகுந்தராயர் சத்திரம் வரை சென்று திரும்பினர். பலர் தனுஷ்கோடியை காணும் ஆவலில் முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து மீன் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் கடற்கரை மணல் பரப்பில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு தனுஷ்கோடிக்கு சென்று வந்தனர்.

இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.65 கோடி செலவில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இதனை 2017–ம் ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்து, நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். அதன்பின்னர் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் அரிச்சல்முனை வரை வாகனங்களில் சென்று, புயலால் அழிந்து போன தனுஷ்கோடி நகரத்தின் சுவடுகளை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுமார் 55 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு ரெயில் பாதை அமைக்க ரூ.208 கோடியில் திட்டம் தயார் செய்யப்பட்டது. அதற்கான பணிகளை நேற்று கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

100 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பாம்பன் ரெயில் பாலம் உலக அளவில் பிரசித்தி பெற்றது. சில மாதங்களுக்கு முன்பு அந்த பாலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூக்குபாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 85 நாட்கள் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது அந்த பாலத்தின் வழியே மீண்டும் ராமேசுவரத்துக்கு பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போதுள்ள ரெயில் பாலம் 100 வயதை கடந்து விட்டதாலும், பராமரிப்பு பணிகள் காரணமாக அந்த பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதாலும், தற்போதுள்ள பாலத்தின் அருகில் ரூ.250 கோடி செலவில் பாம்பன் கடலுக்குள் புதிய ரெயில் பாலம் அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. கன்னியாகுமரியில் நேற்று நடைபெற்ற விழாவில், அந்த பாலத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த இரு திட்ட பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டதை ராமேசுவரம் பகுதி மக்கள் மட்டுமல்லாது, சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வரவேற்றுள்ளனர். இந்த திட்டப்பணிகள் முடிவடைந்து தனுஷ்கோடிக்கு ரெயில்கள் இயக்கப்படும் போது, புத்துயிர் பெறப்போகும் அந்நகரின் அழகை ரெயிலிலேயே சென்று ரசிக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.


அதிகம் வாசிக்கப்பட்டவை