பிளாஸ்டிக் தடை விஷயத்தில் மிகப்பெரிய பேரம் நடந்துள்ளது பாரதீய ஜனதா குற்றச்சாட்டு
பிளாஸ்டிக் தடை விஷயத்தில் மிகப்பெரிய பேரம் நடந்துள்ளதாக பாரதீய ஜனதா கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
புதுச்சேரி,
பாரதீய ஜனதா கட்சியின் புதுவை தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
புதுச்சேரியில் மார்ச் 1–ந்தேதி முதல் அனைத்து இடங்களிலும் மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுகிறது என புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. ஆனால் இப்போது காலதாமதம் ஆகும் என அமைச்சர் கந்தசாமி கூறுவதில் மிகப்பெரிய ஊழல் அடங்கியுள்ளது. இதில் ஆளும் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் கைமாறியுள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
பெரிய மாநிலமான தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் புதுச்சேரி மாநிலம் பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் சந்தை கூடமாக மாறிவருகிறது. அதுமட்டுமின்றி வெளிமாநிலத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் திருட்டுத்தனமாக புதுச்சேரியில் விற்பனையாகிறது. நாளுக்குநாள் குப்பை கிடங்காக மாறி வருகிறது.
இங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பார்சல் பேப்பர்கள், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கவர்கள் போன்றவை தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. தடை அறிவிப்பு வெளியிட்டும் ஆணையை அமல்படுத்தாத மக்கள் நலனில் அக்கறையில்லாத முதல்–அமைச்சர் நாராயணசாமியை பாரதீய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஒவ்வொரு விஷயத்திலும் ஆணை வெளியிட்டு அதில் ஆளும் அரசே பின்வாங்குவதால் உள்நோக்கமுடையதாக தெரிகிறது.
முதல்–அமைச்சர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் நிவாரண நிதி என்ற பெயரில் ஒருதலை பட்சமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சிக்காரர்களுக்கு அரசின் பணத்தை இலவசமாக அளித்துள்ளார். எனவே இதுபோன்ற மக்கள் பிரச்சினையை விவாதிக்க சட்டமன்றத்தையும் ஒருவாரம் கூட்ட வேண்டும்.
ஆளுகின்ற காங்கிரஸ் அரசு பிளாஸ்டிக் தடை ஆணை என்ற பெயரில் பல கம்பெனிகளிடம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி பதில் அளிக்கவேண்டும். பிளாஸ்டிக் தடை விஷயத்தில் மிகப்பெரிய பேரம் நடந்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.