நவீன வசதிகளுடன் கூடிய தேஜஸ் சொகுசு ரெயில், சேவையை தொடங்கியது மதுரையில் இருந்து சென்னைக்கு பயணிகள் உற்சாக பயணம்


நவீன வசதிகளுடன் கூடிய தேஜஸ் சொகுசு ரெயில், சேவையை தொடங்கியது மதுரையில் இருந்து சென்னைக்கு பயணிகள் உற்சாக பயணம்
x
தினத்தந்தி 2 March 2019 4:45 AM IST (Updated: 2 March 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இருந்து சென்னைக்கு அதிவேக அதிநவீன தேஜஸ் சொகுசு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று தனது சேவையை தொடங்கியது. பயணிகள் உற்சாகமாக பயணம் மேற்கொண்டனர்.

மதுரை,

தென் மாவட்ட பயணிகளிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அதிநவீன, முற்றிலும் குளிரூட்டப்பட்ட தேஜஸ் சொகுசு ரெயில் மதுரை–சென்னை இடையே இயக்கப்படும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. அந்த ரெயிலை கன்னியாகுமரியில் நேற்று நடந்த அரசு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து மதுரை ரெயில்நிலையத்தின 1–வது பிளாட்பாரத்தில் இருந்து, கோட்ட ரெயில்வே மேலாளர் நீனு இட்டியேரா, மாவட்ட கலெக்டர் நடராஜன், முதுநிலை வர்த்தக மேலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் வழியனுப்ப தேஜஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, மணிகண்டன், திண்டுக்கல் எம்.பி. உதயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் இருந்து நேற்று மதியம் 3 மணிக்கு சேவையை தொடங்கிய இந்த ரெயிலில் பயணிகள் உற்சாக பயணம் மேற்கொண்டனர். சென்னையை சேர்ந்த ரெயில் என்ஜின் ஓட்டுனர்கள், ஏ.சி. மெக்கானிக்குகள், உதவியாளர்கள் மற்றும் மெக்கானிக்கல் பிரிவு அலுவலர்கள், ஐ.ஆர்.சி.டி.சி. அலுவலர்கள் ஆகியோரும் பயணிகளுடன் பயணித்தனர். ரெயில் கேப்டனாக முதன்மை டிக்கெட் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, டிக்கெட் பரிசோதகர்கள் பயாஸ் வாஸ், அருண்பிரசாத், பாலசுப்பிரமணியன் ஆகியோர் டிக்கெட் பரிசோதனை பணிகளை மேற்கொண்டனர்.

மதுரை கோட்ட டிக்கெட் பரிசோதகர்களே இரு மார்க்கங்களிலும் டிக்கெட் பரிசோதனை பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ரெயில் (வ.எண்.22672)மதுரையில் இருந்து தினமும் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில்நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் (வ.எண்.22671) சென்னையில் இருந்து தினமும் அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்தடைகிறது. ஆனால், இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் வியாழக்கிழமையை தவிர பிற நாட்களில் இயக்கப்படும்.

கொடைரோடு, திருச்சி ஆகிய 2 ரெயில்நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். ரெயில் மணிக்கு 160 கி.மீ. வேகம் வரை இயக்க அனுமதி வழங்கப்பட்டாலும், அதைவிட குறைவான வேகத்தில்தான் இயக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் 497 கி.மீ. தூரத்தை 6½ மணி நேரத்தில் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேஜஸ் ரெயிலுக்கான முன்பதிவு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கியது. தற்போது சிறப்பு ரெயிலாக இயக்கப்படுவதால் மதுரையில் இருந்து செல்லும் பயணிகள் வ.எண். 02672 என்றும், சென்னையில் இருந்து வரும் பயணிகள் வ.எண்.02671 என்றும் முன்பதிவு செய்ய வேண்டும். பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து நிரந்தர ரெயிலாக இயக்கப்படும்.

டீ, குளிர்பானம், பிஸ்கெட் மற்றும் சிற்றுண்டி ஆகியவற்றுடன் கூடிய முன்பதிவு கட்டணமாக மதுரையில் இருந்து சென்னைக்கு சேர்கார் வகுப்புக்கு ரூ.1,195, எக்சிகியூடிவ் வகுப்புக்கு ரூ.2,295 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உணவு இல்லாமல் முறையே ரூ.895 மற்றும் ரூ.1,940 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நேற்று புறப்பட்ட ரெயிலில் மூத்தகுடிமக்களுக்கான கட்டணச்சலுகை மட்டும் வழங்கப்பட்டது.

பொழுதுபோக்கு அம்சங்களுக்காக ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் எல்.இ.டி. திரை பொருத்தப்பட்டுள்ளன. இதில், செய்தி, டி.வி.நேரலை, சினிமா, ஜி.பி.எஸ். பயண வரைபடம், ரெயிலின் தற்போதைய நிலை, தகவல்கள், பயணிகளின் கருத்து கேட்பு என பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஹாலிவுட் சினிமாக்கள் பிரிவில் டை கார்டு உள்ளிட்ட 5 ஆங்கிலப்படங்களும், தமிழில் மாயவன், நாட்டுப்புறப்பாட்டு, வெள்ளிவிழா, காத்திருப்போர் பட்டியல், உயர்ந்த மனிதன் ஆகிய சினிமாக்களும், நகைச்சுவை காட்சிகள், சினிமா பாடல்கள் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன.

இந்தி மொழியில் 7 படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் எக்சிகியூடிவ் வகுப்பு பயணிகளுக்கு மட்டும் ரெயில்வே துறை சார்பில் ஹெட்போன்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. ஆனால், இவற்றை திருப்பி கொடுத்து விட வேண்டும். சேர்கார் வகுப்பு பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் ரூ.20 கட்டணத்தில் ஹெட்போன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை பயணிகள் சொந்தமாக வைத்துக்கொள்ளலாம்.


Next Story