தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு எவ்வளவு மணல் கொண்டு செல்லப்படுகிறது? மதுரை ஐகோர்ட்டு கேள்வி


தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு எவ்வளவு மணல் கொண்டு செல்லப்படுகிறது? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 2 March 2019 4:15 AM IST (Updated: 2 March 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு எவ்வளவு மணல் கொண்டு செல்லப்படுகிறது? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

மதுரை,

புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்து மணல் கடத்தல் நடக்கிறது. எனவே கனிம வளச்சட்டத்தின்படி, எடை மேடை, தேசிய நெடுஞ்சாலைகளில் சோதனைச்சாவடி ஏற்படுத்தி, சி.சி.டி.வி. கேமரா பொருத்தி, இணையதளம் மூலம் கண்காணிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் மணல் எடுத்து செல்லும் லாரிகளின் எடையை கணக்கிட எடை மேடை அமைக்கப்பட்டுள்ளதா?

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் மணலை எடுத்து செல்லும் லாரிகளை கண்காணிக்கவும், மணல் திருட்டை தடுக்கவும் கனிம வளச்சட்டம் 1957–ன்படி சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளனவா? எத்தனை சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன?

மணல் திருட்டு, கொள்ளையை தடுக்க கனிம வளச்சட்டத்தில் கூறியுள்ளபடி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா?

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் எத்தனை? இதில் எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன?

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு எவ்வளவு மணல் கொண்டு செல்லப்படுகிறது? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலாளர், வருவாய்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 15–ந்தேதி ஒத்திவைத்தனர்.


Next Story