திருமங்கலத்தில் துணிகரம்: நெல் வியாபாரி வீடு புகுந்து 54 பவுன் நகை கொள்ளை


திருமங்கலத்தில் துணிகரம்: நெல் வியாபாரி வீடு புகுந்து 54 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 2 March 2019 3:45 AM IST (Updated: 2 March 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

மதுரை திருமங்கலத்தில் நெல் வியாபாரி வீட்டினுள் புகுந்து 54 பவுன் நகைகள் மற்றும் ரூ.27 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

திருமங்கலம்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் சீயோன்நகர், நாராயணசாமி தெருவில் வசித்து வருபவர் முததுராமன் (வயது 50). இவர் நெல் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் ஜெகநாத் (23), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வீட்டின் கதவை பூட்டிவிட்டு, முத்துராமன் நெல் வியாபாரம் தொடர்பாக சென்றுவிட்டார்.

இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த பீரோவை உடைத்த ஆசாமிகள், அதில் இருந்த 54 பவுன் நகைகள் மற்றும் ரூ.27 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிவிட்டனர்.

இதற்கிடையே இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்த ஜெகநாத், பின்பக்க கதவு உடைக்கப்பட்டு நகைகள், பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தனது தந்தையிடம் அவர் தெரிவித்தார்.

ஜெயராமன் உடனடியாக திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஜெயராமனின் வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மதுரையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடந்தது. தடயவியல் துறை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Next Story