தி.மு.க. கூட்டணியி குழப்புவதற்கு சிலர் திட்டமிடுகிறார்கள் மதுரையில் தொல்.திருமாவளவன் பேட்டி
தி.மு.க. கூட்டணியை குழப்புவதற்கு சிலர் திட்டமிடுவதாக மதுரையில் தொல்.திருமாவளவன் கூறினார்.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது–
பா.ம.க.வின் கடந்தகால அரசியல் நடவடிக்கைகளும், தற்போதைய அரசியல் நிலைப்பாடும் பொதுமக்களிடையே பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. தே.மு.தி.க.–அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளிவரவில்லை. யூகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
தி.மு.க. கூட்டணியை குழப்புவதற்கு சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்புகிறார்கள். இடதுசாரிகள் தி.மு.க.வோடு இணக்கமாக இருக்கிறது என்பது நாடறிந்த உண்மை. ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் ஈடுபட்ட முகிலன் காணாமல் போய் 2 வாரத்திற்கு மேல் ஆகிறது. இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்பதை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. அவரை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்.
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாதுகாப்பாக இந்தியா திரும்பி இருக்கிறார் என்ற தகவல் மிகுந்த ஆறுதலை அளிக்கிறது. சர்வதேச நாடுகளின் அழுத்தத்தால் பாகிஸ்தான் அவரை பாதுகாப்பாக ஒப்படைத்திருக்கிறது. பாகிஸ்தான் எல்லை ஓரத்தில் பதற்றத்தை தவிர்க்கவும் போர்ச்சூழலை தடுக்கவும் இந்த நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இந்த நடவடிக்கை இருநாடுகளுக்கிடையிலான போரை தவிர்த்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவும், பாராட்டவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடமைப்பட்டிருக்கிறது.
அபிநந்தன் மட்டும்தான் பிடிபட்டாரா வேறு வீரர்கள் பிடிபட்டார்களா என்பதை இந்திய அரசு நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அபிநந்தனின் வீரமிக்க செயல்பாடுகளை இந்திய குடிமகன் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.
பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும்போது தான் எல்லையோரங்களில் பதற்றம் உருவாகி வருகிறது. அதிலும் கடந்த 5 ஆண்டுகால மோடி ஆட்சியில், தேர்தல் நெருங்கும் வேளையில் தான் இப்படிபட்ட பதற்றம் உருவாகிறது. பா.ஜ.க.வினர் இத்தகைய சூழலை உருவாக்குகிறார்களா? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.