காங்கிரஸ், சிவசேனா கட்சிகளுக்கு நோட்டீஸ் : ஐகோர்ட்டு உத்தரவு
சட்டவிரோதமாக பேனர் வைத்த காங்கிரஸ், சிவசேனா, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மும்பை,
சாலைகள் மற்றும் பொது இடங்களில் தகுந்த அனுமதி இன்றி பேனர்கள் வைப்பதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. இதிலும் குறிப்பாக கட்சிகள் சார்பில் தான் அதிக பேனர்கள் வைக்கப்படுகின்றன.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.எஸ். ஒகா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டவிரோதமாக பேனர்கள் வைத்த காங்கிரஸ், சிவசேனா, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் நீதிபதி கூறியதாவது:-
கட்சிகள் சார்பில் சட்டவிரோதமாக கோர்ட்டின் உத்தரவை மீறி பேனர்கள் வைக்கப்படுகின்றன. எனவே குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஏன் அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மார்ச் 27-ந் தேதிக்குள் இதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும். தற்போது நாங்கள் அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம். ஆனால் கட்சிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில், கட்சி தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
Related Tags :
Next Story