இலுப்பூரில் புயல் நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


இலுப்பூரில் புயல் நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 March 2019 4:30 AM IST (Updated: 3 March 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

இலுப்பூரில் புயல் நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அன்னவாசல்,

கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து புயல் பாதித்த பகுதிகளில் வருவாய் துறையினர் மூலம் கணக்கு எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு அவர்களது வங்கி கணக்கில் நிவாரணதொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த பொருட்கள் வழங்கப்பட்ட போது மாவட்ட முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் நிவாரண தொகை ஏற்றப்பட்ட நிலையில், வருவாய்துறையினர் அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்காமல் நிறுத்தி வைத்தனர்.

இந்த நிலையில் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் போக, மீதம் வழங்கப்பட வேண்டிய நிவாரண பொருட்கள் அனைத்தும் இலுப்பூர் மேலப்பட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது புயலால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண தொகை மட்டும் பெற்று பொருட்கள் வழங்கப்படாத நபர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதாக கூறப்பட்டது.

இதனை அறிந்த அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று இலுப்பூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்து அனைவருக்கும் பொருட்கள் வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள் முதலில் கணக்கு எடுத்துள்ளவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படுவதாக கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story