பா.ஜ.க–அ.தி.மு.க. வலிமையான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும் எச்.ராஜா பேட்டி
வருகிற நாடாளு மன்ற தேர்தலில் பா.ஜ.க.– அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அந்த கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார்.
காரைக்குடி,
காரைக்குடியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அந்த கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமை தாங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.–அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெரும். இந்த கூட்டணி வலிமைமிக்க கூட்டணியாகும். ம.தி.மு.க. கட்சி என்பது ஒரு பூஜ்யம். அந்த கட்சி எங்களுடன் கூட்டணிக்கு வராதது பெரிய பாதிப்பு இல்லை.
பாகிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட இந்திய வீரர் அபிநந்தன் மிகவும் தேச பக்தி உடையவர். பிரமர் மோடியினால் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக பாகிஸ்தானில் கைதியாக சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுவித்தது. காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தையடுத்து பிரதமர் தீவிரவாதிகளை ஒடுக்கும் அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளார்.
அவரது நடவடிக்கைக்கு அனைத்து நாடுகளும் முழு ஆதரவை கொடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையால் மிரண்டு போன பாகிஸ்தான் அரசு போர் வேண்டாம், சமாதான பேச்சு வார்த்தை நடத்த முன் வந்துள்ளது. ஆனால் இதற்கு முன்பு நடந்த மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு அப்போது பாகிஸ்தான் எவ்வித அனுதாபம் தெரிவிக்கவில்லை. இன்றை இந்திய இளைஞர்கள் வீரர் அபிநந்தனின் மன உறுதி மற்றும் அவரது தேச பற்றை கடைப்பிடித்து அவரை முன் உதாரணமாக வைக்க வேண்டும்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதிக்கு பா.ஜ.க. சார்பில் என்னை நிறுத்தினால் அதை சந்திக்க தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து காரைக்குடி ரெயில்வே சாலையில் தொடங்கிய மோட்டார் சைக்கிள் ஊர்வலம், 100அடி சாலை, பெரியார் சிலை, செக்காலை ரோடு, 2–வது பீட் பகுதி, கொப்புடையம்மன் கோவில் வீதி, பழைய பஸ் நிலையம், வ.உ.சி. சாலை, கழனிவாசல், வருமான வரித்துறை அலுவலகம், கல்லூரி சாலை வழியாக வந்து நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பா.ஜ.க.வினர் கலந்துகொண்டனர்.