தஞ்சையில் வாய்க்காலில் தலையின்றி ஆண் சிசு உடல் நரபலி கொடுக்கப்பட்டதா? போலீசார் விசாரணை


தஞ்சையில் வாய்க்காலில் தலையின்றி ஆண் சிசு உடல் நரபலி கொடுக்கப்பட்டதா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 March 2019 3:45 AM IST (Updated: 4 March 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் வாய்க்காலில் தலையின்றி ஆண் சிசு உடல் கிடந்தது. இந்த குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை பர்மாகாலனி அருகே தில்லைநகரில் உள்ள வாய்க்காலில் பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் சிசு தலையில்லாமல் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர், தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வமோகன், சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அந்த சிசுவை வீசிவிட்டு சென்றது யார்? என்ற விவரம் தெரிய வில்லை. தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் இருந்தது. பின்னர் சிசுவின் உடலை போலீசார் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கிற்கு கொண்டு சென்றனர். கள்ளக்காதல் காரணமாக பெண் கர்ப்பம் அடைந்து, அதன் மூலம் குழந்தை பிறந்ததால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வாய்க்காலில் வீசிவிட்டு சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் சிசு தலையின்றி கிடந்ததால் நரபலி கொடுக்கப்பட்டதா? என்ற சந்தேகம் மக்களிடம் நிலவுகிறது.

இது குறித்து போலீசார் கூறும்போது, கள்ளக்காதல் காரணமாக பெண் கர்ப்பம் அடைந்து இருக்கிறார். வெளியே தெரிந்தால் அவமானம் என கருதி, அந்த பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்து இருக்கின்றனர். பிரசவத்தின்போது முதலில் தலை தான் வெளியே வரும். அப்படி வெளியே வந்த தலையை பிடித்து அவசரமாக வெளியே இழுத்ததால் தலை தனியாக பிய்ந்து கொண்டு வந்துள்ளது. உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் இப்படி தான் தலை பிய்ந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். இருந்தாலும் தலை பகுதி எங்கே இருக்கிறது என தெரியவில்லை. இதனால் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

இந்த சம்பவம் குறித்து புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை தலையில்லாமல் வீசி விட்டு சென்றவர்கள் யார்? தலை பகுதி எங்கே? நரபலி எதுவும் கொடுக்கப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story