கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை கட்டிட தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் வலியுறுத்தல்


கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை கட்டிட தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-04T01:23:58+05:30)

கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டிட தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

கும்பகோணம்,

கும்பகோணத்தில் கட்டிட தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்க டெல்டா மண்டல மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மண்டல தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். மேலாண்மை குழு தலைவர் வின்சென்ட் பிரபாகரன் முன்னிலை வகித்தார். சங்க தலைவர் செந்தில்குமரன் வரவேற்றார். மண்டல செயலாளர் ராஜேஷ் ஆண்டறிக்கை படித்தார். தமிழ் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

டெல்டா மாவட்டங்களுக்கு என தனியாக மணல்குவாரி அமைத்து, அங்கு கிடைக்கும் மணலை டெல்டா மாவட்டங்களுக்கு மட்டும் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல், சிமெண்டு, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி, ஒழுங்குமுறை ஆணையம் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய கட்டிட விதிகளின் படி சென்னையை தவிர மற்ற மாவட்டங்களுக்கு எந்தவித பயனும் இல்லாததால் விதிகளை தளர்த்த வேண்டும். மாநில திட்ட குழுமம், நகராட்சி, பேரூராட்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்கள் ஒன்றிணைந்து பொறியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் கட்டுமானத்துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தி கட்டுமானத்துறையை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செயலாண்மை குழு துணைத்தலைவர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

Next Story