தஞ்சை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு போலீசார் விசாரணை


தஞ்சை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 March 2019 10:15 PM GMT (Updated: 2019-03-04T01:26:34+05:30)

தஞ்சை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த அற்புதாபுரம் தெற்குதெருவை சேர்ந்தவர் சவரிமுத்து. இவருடைய மனைவி மரியம்மாள்(வயது55). கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருந்தார். வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தனர்.

அங்கு பீரோவை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். இந்தநிலையில் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மரியம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததுடன், பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் எல்லாம் அறையில் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.19 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.

மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு மற்றும் பீரோ உள்ளிட்ட இடங்களில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து மரியம்மாள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story