சாமிதோப்பு தலைமை பதிக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வந்ததால் பரபரப்பு


சாமிதோப்பு தலைமை பதிக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 March 2019 4:15 AM IST (Updated: 4 March 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

சாமிதோப்பு தலைமை பதிக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வந்ததால் பரபரப்பு போலீஸ் குவிப்பு.

தென்தாமரைகுளம்,

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் அவதார தினவிழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி தலைமை பதிக்கு பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும். சில தினங்களுக்கு முன் மதுரை ஐகோர்ட்டு, வைகுண்டசாமி தலைமை பதி அவதார தினவிழாவில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மற்றும் வரவு-செலவுகளை பார்க்க வேண்டும் என்று அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. மேலும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. அதன்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின் பேரில், சாமிதோப்பில் கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்

இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் சாமிதோப்பு தலைமை பதிக்கு இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் பொன்னி தலைமையில் அதிகாரிகள் வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தற்போது தலைமைப்பதியை நடத்தி வருபவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அதைத்தொடர்ந்து பதி நடத்துபவர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர், போலீசார் கோர்ட்டு உத்தரவு பற்றி கூறியதை தொடர்ந்து, அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

Next Story