கார் மீது லாரி மோதல்: அறுபதாம் கல்யாணம் முடிந்து திரும்பிய தம்பதி பலி


கார் மீது லாரி மோதல்: அறுபதாம் கல்யாணம் முடிந்து திரும்பிய தம்பதி பலி
x
தினத்தந்தி 5 March 2019 4:45 AM IST (Updated: 5 March 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

அறுபதாம் கல்யாணம் முடிந்து திரும்பிய தம்பதி, கரூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பலியானார்கள். மகன் கண்முன்னே இந்த பரிதாபம் நடந்தது.

கரூர்,

திருப்பூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 65). இவர் திருப்பூரில் உள்ள விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சுப்புலட்சுமி (60).

இவர்களது மகன் கார்த்திக் (37). இவரும் தந்தையுடன் அதே கோவிலில் அர்ச்சகராக உள்ளார். இந்த நிலையில் சிவானந்தம் தனது மனைவி, மகன் மற்றும் மருமகள் கருணாம்பாள் (29), 2½ வயது பேரன், உறவினர் சந்தோஷ் (27) ஆகியோருடன் ஒரு காரில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு சிவானந்தம்-சுப்புலட்சுமி ஆகியோருக்கு அறுபதாம் கல்யாணம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் அதேகாரில் திருப்பூருக்கு திரும்பினர். காரை கார்த்திக் ஓட்டினார். அவர்களது கார் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கள்ளுக்கடைபாலம் பகுதியில் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது.

இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே பலியானார். சிவானந்தம் படுகாயமடைந்தார். கார்த்திக் அவரது மனைவி கருணாம்பாள், 2½ வயது குழந்தை, உறவினர் சந்தோஷ் ஆகியோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயம் அடைந்த சிவானந்தம் கரூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிவானந்தமும் இறந்தார். அறுபதாம் கல்யாணம் முடிந்த பெற்றோர் தனது கண்முன்னே பலியானதை பார்த்து கார்த்திக் கதறி அழுதார்.

இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் நாகை மாவட்டம் மயிலாடுதுறை சேர்ந்த சேர்ந்த கார்த்திகேயனை (31) போலீசார் கைது செய்தனர்.

Next Story