சிறுமுகை அருகே, காட்டு யானை தாக்கி மீனவர் படுகாயம் - மகன் தப்பினார்
சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி மீனவர் படுகாயம் அடைந்தார். மகன் தப்பினார்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே பெத்திக்குட்டை பகுதியை அடுத்துள்ள ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). இவரது மகன் தங்கராஜ் (27). இவர்கள் இருவரும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். வழக்கம்போல் நேற்று தந்தை-மகன் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மீன் பிடிக்க சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். காலை 10.30 மணிக்கு கருப்பராயன் கோவில் வழியாக சிட்டேபாளையம் நோக்கி வண்ணாம்பாறை வனப்பகுதி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு காட்டு யானை எதிரில் வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தலைதெறிக்க தப்பி ஓடினார்கள். ஆனாலும் யானை விடாமல் துரத்தி சென்றது. உடனே தங்கராஜ் யானையை திசை திருப்பும் நோக்கத்தில் சத்தமிட்டபடி இன்னொருபுறம் வனப்பகுதிக்குள் ஓடினார். அதனால் யானை அவரை விட்டு விட்டது.தொடர்ந்து முருகேசனை விரட்டியது. ஒருகட்டத்தில் அவரால் ஓட முடியாத நிலை ஏற்பட்டபோது அவரை தந்தத்தால் குத்தியது. பின்னர் துதிக்கையால் முருகேசனை தூக்கி வீசிவிட்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் வலியால் துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ஜீப் மூலம் சிறுமுகைக்கு கொண்டு வந்தனர். அதன் பின்னர் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மீன் பிடிக்க சென்று விட்டு திரும்பியவர்களை பட்டபகலில் காட்டு யானை தாக்கிய சம்பவம், அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story