மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் செய்ததை கண்டித்து வருவாய்-ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்


மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் செய்ததை கண்டித்து வருவாய்-ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 March 2019 4:15 AM IST (Updated: 5 March 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் செய்ததை கண்டித்து வருவாய்- ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள் பணி இடம் மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர். குறிப்பாக வருவாய்த்துறையில் தாசில்தார்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணிமாறுதல் செய்யப்பட்டு உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாசில்தார்களும் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளுக்கு காரணமான இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினரும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினரும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று அவர்கள் தங்களது அலுவலகங்களில் இருந்தபடியே உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்தனர். மாலையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவிசங்கர், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் மருதுபாண்டி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். போராட்டத்தின் நோக்கம் பற்றி ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணை தலைவர் பழனியப்பன் பேசினார். மற்றும் சங்க நிர்வாகிகள் முருகன், ரீட்டா ஆகியோரும் பேசினார்கள். வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளின் வேலை நிறுத்த போராட்டம் இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story