வீட்டுமனை பட்டா வழங்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு


வீட்டுமனை பட்டா வழங்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 4 March 2019 11:00 PM GMT (Updated: 4 March 2019 10:07 PM GMT)

வீட்டுமனை பட்டா வழங்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஈரோடு லட்சுமிநகரை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார்.

மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:–

குரங்கன் ஓடை மூலமாக சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், பல லட்சம் தென்னை மரங்கள் ஓடை தண்ணீர் மூலமாக தண்ணீர் வசதியை பெறுகிறது. இந்த நிலையில் மொடக்குறிச்சி அருகே குலவிளக்கு கிராமத்தில் குரங்கன் ஓடைக்கு அருகில் ‘வாஷிங் யூனிட்’ என்ற தொழிற்சாலை தொடங்கப்பட்டு உள்ளது. அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் ஏற்கனவே 2 இடங்களில் சாயப்பட்டறைகள் வைத்து உள்ளார். எனவே புதிய தொழிற்சாலையையும் சாயப்பட்டறையாக மாற்ற முயற்சிகள் நடக்கிறது. இதனால் குரங்கன் ஓடையில் சாயக்கழிவு கலக்கப்படும். எனவே குரங்கன் ஓடையை பாதுகாக்க ஓடைக்கு அருகில் எந்தவொரு தொழிற்சாலையையும் திறக்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

பவானி லட்சுமிநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:–

எங்கள் பகுதியை சேர்ந்த பலர் மேம்பாலத்துக்கு கீழ்பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுதொடர்பாக பலமுறை ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளோம். ஆனால் எங்களுக்கு பிறகு மனு கொடுத்த பலருக்கும் வீட்டுமனை வழங்கப்பட்டு விட்டது. எனவே எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் சங்கத்தினர் கொடுத்த மனுவில், வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்க வேண்டும். விபத்தினால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை பெறுவதற்கான நிவாரணம் வழங்க வேண்டும். இயற்கையாக மரணம் அடைந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், விபத்தினால் மரணம் அடைந்தால் ரூ.10 லட்சமும் கொடுக்க வேண்டும். திருமண உதவித்தொகையை ரூ.1 லட்சமாக உயர்த்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி இருந்தனர்.

பவானி அருகே மயிலம்பாடி மகளிர் சுய உதவிக்குழு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘‘மயிலம்பாடியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு 24 மணிநேரமும் சமூக விதிமுறையை மீறி மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே அங்கு அனுமதியின்றி மது விற்பனை செய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று கூறப்பட்டு இருந்தது.

சமூக ஆர்வலர்கள் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த் மற்றும் பொறுப்பாளர்கள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்றாலும் மேற்கண்ட துறைகளின் அலுவலர்கள் மாவட்ட மாறுதல்கள் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகளை புறக்கணித்து போராடி வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் முக்கிய அவசர சான்றுகள் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன.

தேர்தல் அறிவிப்புகள் வந்துவிட்டால் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நலத்திட்ட பணிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேற்படி துறைகளின் அதிகாரிகள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டு புதிதாக வேறு மாவட்டங்களில் இருந்து வரும் அலுவலர்கள் இந்த பகுதியின் சமூக நிலையை அறிந்து பணிகள் செய்ய காலதாமதங்கள் ஏற்படும். எனவே பொதுமக்கள் சிரம நிலையை கருத்தில் கொண்டு மக்கள் நலத்திட்டங்கள், முக்கிய சான்றுகள் கிடைக்க மாவட்டம் விட்டு மாறுதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மொத்தம் 348 மனுக்களை கொடுத்தனர். கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் கணேசன், மாவட்ட வழங்கல் அதிகாரி ஜெயராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஈரோடு பிரப் ரோட்டின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் பலர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:–

ஈரோடு நகரத்தின் தந்தை மற்றும் கல்வி தந்தையாக விளங்கிய பிரப்பின் நினைவாக பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வரை செல்லும் சாலை கடந்த 80 ஆண்டுகளாக பிரப்ரோடு என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஈரோட்டில் புதிய மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘பிரப்ரோடு’ என்ற பெயரை மாற்றி ‘மீனாட்சி சுந்தரனார் சாலை’ என்று பெயர் மாற்றம் செய்து அறிவித்தார். இது கிறிஸ்தவர்கள் உள்பட பொதுமக்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே பிரப்ரோடு என்ற பெயரை மாற்றக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.


Next Story