‘நிட்டெக்’ கண்காட்சி நிறைவு: 4 நாட்களில் 42 ஆயிரம் பேர் பார்வையிட்டனர் ரூ.450 கோடிக்கு வர்த்தக விசாரணை


‘நிட்டெக்’ கண்காட்சி நிறைவு: 4 நாட்களில் 42 ஆயிரம் பேர் பார்வையிட்டனர் ரூ.450 கோடிக்கு வர்த்தக விசாரணை
x
தினத்தந்தி 5 March 2019 3:53 AM IST (Updated: 5 March 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

‘நிட்டெக்’ பின்னலாடை எந்திர கண்காட்சி நிறைவடைந்தது. 4 நாட்கள் நடந்த கண்காட்சியை 42 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். ரூ.450 கோடிக்கு வர்த்தக விசாரணை நடந்தது.

திருப்பூர்,

ஹைடெக் இண்டர்நே‌ஷனல் டிரேடு பேர் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் சார்பில் திருப்பூர் பூண்டி ரிங் ரோட்டில் உள்ள ‘நிட்டெக்’ கண்காட்சி வளாகத்தில் ‘நிட்டெக்–2019’ என்ற பெயரில், ஆசியாவின் மிகப்பெரிய பின்னலாடை எந்திர மற்றும் தொழில்நுட்ப 15–வது கண்காட்சி கடந்த 1–ந் தேதி தொடங்கியது.

4 நாட்கள் நடந்த கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த 4 நாட்களும் கண்காட்சிக்கு பலர் வருகை தந்து எந்திரங்களை பார்வையிட்டு சென்றனர். மேலும், வர்த்தக விசாரணையும் நடத்தினர். கண்காட்சிக்கு தினமும் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் வருகை தந்தார்கள்.

500 அரங்குகளை கொண்ட இந்த கண்காட்சியில் இந்தியா, தைவான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 23 நாடுகளை சேர்ந்த பல நிறுவனங்கள் தங்களது எந்திரங்களை காட்சிப்படுத்தியிருந்தன. பின்னலாடை தொழில் கடுமையான வர்த்தக போட்டியை சந்தித்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் தொழில்துறையினர் ஆடை தயாரிப்பில் பல்வேறு புதுமைகளை புகுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு எந்திரங்களின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.

இதனால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ‘நிட்டெக்’ பின்னலாடை எந்திர கண்காட்சியில் தொழில்துறையினர் ஆர்வமாக கலந்துகொண்டனர். கடைசி நாளான நேற்று வர்த்தகர்கள், பொதுமக்கள் பலர் குவிந்தனர். இதுபோல் ஏராளமான இளம்பெண்களும் வந்து எந்திரங்களை பார்வையிட்டு சென்றார்கள். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஹைடெக் இண்டர்நே‌ஷனல் டிரேடு பேர் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் சிபி சக்கரவர்த்தி, ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகி ஹரீஷ்குமார் உள்பட பலர் செய்திருந்தனர்.

இது குறித்து ஹைடெக் இண்டர்நே‌ஷனல் டிரேடு பேர் இந்தியா பிரைவேட் நிறுவன தலைவர் ராயப்பன் கூறியதாவது:–

‘நிட்டெக்’ கண்காட்சி திருப்பூர் தொழில்துறையினருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து எந்திரங்களும் நவீன தொழில்நுட்பங்களை கொண்டவை.

இதனால் கண்காட்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே 4 நாட்களும் வர்த்தகர்கள், தொழில்துறையினர் பலரும் ஆர்வமாக இதில் பங்கேற்றனர். மும்பை, லூதியானா, கொல்கத்தா, இலங்கை உள்பட பகுதிகளில் இருந்தும் உள்மாநிலங்களை சேர்ந்த வர்த்தகர்களும் கடந்த கண்காட்சியை விடவும், இந்த ஆண்டு கண்காட்சியில் அதிகளவில் பங்கேற்றார்கள். 4 நாட்களில் 42 ஆயிரத்து 500 பேர் கண்காட்சியில் கலந்துகொண்டு, எந்திரங்களை பார்வையிட்டு சென்றனர்.

குறிப்பாக இந்த கண்காட்சியில் ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்ட சாய ஆலைகளுக்கு எந்திரம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. குறைந்த செலவில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், இந்த எந்திரம் இருந்தது. இதனால் பலரையும் கவர்ந்தது. இதுபோல் லேப் டெஸ்டிங் எந்திரம் ஒன்று எங்கும் இல்லாத தொழில்நுட்பத்துடன் இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்து வைத்திருந்தது. இந்த எந்திரமும் பலரையும் கவர்ந்தது.

இந்த ஆண்டு நிட்டிங் எந்திரங்களை 22 நிறுவனங்கள் காட்சிப்படுத்தியிருந்தன. 4 நாட்களில் 20 சாய ஆலைகளுக்கான நவீன தொழில்நுட்பம் கொண்ட எந்திரங்கள் விற்பனையாகின. சீன வர்த்தகர்களுக்கு ஏஜெண்டுகள் அதிகளவில் கிடைத்துள்ளனர். மேலும், பின்னலாடை தொழில் சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த கண்காட்சி திருப்தி அளிக்கும் வகையில் இருந்தது. 300 கோடிக்கு வர்த்தக விசாரணை நடைபெறும் என எதிர்பார்த்தோம். ஆனால் ரூ.450 கோடிக்கு வர்த்தக விசாரணை நடைபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story