100 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறையாக சம்பளம் வழங்கக்கோரி கலெக்டரிடம் பெண்கள் மனு


100 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறையாக சம்பளம் வழங்கக்கோரி கலெக்டரிடம் பெண்கள் மனு
x
தினத்தந்தி 5 March 2019 4:03 AM IST (Updated: 5 March 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறையாக சம்பளம் வழங்கக்கோரி கலெக்டரிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்றுகாலை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பழனிசாமி, பொதுச்செயலாளர் மூர்த்தி தலைமையில் 100–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

வீடற்ற கட்டிட கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி செய்து கொடுக்க வேண்டும். விபத்து சிகிச்சைக்கும், சிகிச்சை காலத்திற்கும் நிவாரணம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். பேறுகால பயனாக 6 மாதம் குறைந்தபட்ச சம்பளத்துக்கு ஈடாக ரூ.90 ஆயிரம் வழங்க வேண்டும். இயற்கை மரணத்துக்கு ரூ.5 லட்சமும், விபத்து மரணத்துக்கு ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு நிதி, போனஸ், விடுப்பு வசதி சட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

நலவாரியம் தொடங்கப்பட்டு 26 ஆண்டுகள் ஆகிவிட்டது. நலவாரியத்தின் நோக்கங்களை நிறைவேற்றி கட்டுமான தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.

ஊதியூர் ஒன்றியம் செங்கோடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வட்டமலைபாளையம், நாகரசுநல்லூர், மூக்கணங்கோட்டை பகுதிகளை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். நாளொன்றுக்கு ரூ.224 சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் எங்களுக்கு ரூ.135 மட்டுமே வங்கிக்கணக்கில் போடுகிறார்கள். கடந்த ஜனவரி மாதம், பிப்ரவரி மாதம் வேலை செய்த சம்பளம் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. அதுபோல் ஆண்டுக்கு ஒருவருக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும். ஆனால் 60 நாட்களுக்கும் குறைவாகவே எங்களுக்கு வேலை வழங்கப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு முறையான சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தாராபுரம் வேங்கிப்பாளையம் இடையன் கிணறு பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அனைவரும் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள். எங்கள் பகுதியில் உள்ள மாணவர்கள் குண்டடத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். தாராபுரம்–கொடுவாய் செல்லும் அரசு டவுன் பஸ் கடந்த 3 மாதமாக எங்கள் பகுதிக்கு வரவில்லை. இதனால் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு சென்று வருகிறார்கள். எனவே இடையன்கிணறு பகுதிக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

நல்லூர் நுகர்வோர் நல மன்றத்தினர் அளித்த மனுவில், திருப்பூர் மாநகர பகுதியில் மெட்ரிக் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. அரசின் அனுமதி பெறாமல் பள்ளிகளை நடத்துகிறார்கள். கல்விக்கட்டணம் அதிகம் வாங்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.


Next Story