நிர்மலாதேவி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதா? மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி


நிர்மலாதேவி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதா? மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி
x
தினத்தந்தி 5 March 2019 5:00 AM IST (Updated: 5 March 2019 4:49 AM IST)
t-max-icont-min-icon

‘‘பேராசிரியை நிர்மலாதேவி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதா?’’ என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மதுரை,

ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தி, மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘‘விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முருகன், கருப்பசாமி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலருக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. நிர்மலாதேவி யாருக்காக மாணவிகளிடம் பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரை தப்பிக்க வைக்கும் வகையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் உள்நோக்கம் உள்ளது.

எனவே நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறியதுடன், நிர்மலாதேவி வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், சி.பி.சி.ஐ.டி. போலீசார் முறையாக வழக்கை விசாரிக்கவில்லை. நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரை மட்டும் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 164–ன் படி வாக்குமூலம் பெறப்படவில்லை’’ என்றார்.

அதற்கு நீதிபதிகள், ‘‘குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னரும் ஒருவரை ஜாமீனில் வெளியே விடாமல் வைத்திருக்க வேண்டிய தேவை என்ன? நிர்மலா தேவிக்கு கோர்ட்டு ஏன் தானாக முன்வந்து ஜாமீன் வழங்கக்கூடாது? அவரது உயிருக்கோ, புகார் அளித்த மாணவிகளுக்கோ ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா?’’ என்றும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேசுவரி, ‘‘வழக்கின் சாட்சிகளுக்கோ, நிர்மலாதேவியின் உயிருக்கோ எந்த ஆபத்தும் இல்லை’’ என்று தெரிவித்தார்.

அப்போது மனுதாரரின் வக்கீல்கள், ‘‘நிர்மலா தேவியின் செல்போன் உரையாடல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்துள்ளனர். சுமார் 500–க்கும் மேற்பட்ட உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் எந்த உயரதிகாரிக்காக பேசினார் என்பது குறிப்பிடப்படவில்லை. கல்லூரி பேராசிரியர்கள், பயிற்சிக்கல்லூரியின் முதல்வராக இருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலைச்செல்வனிடம் முறையான விசாரணை நடத்தப்படாமல் ஒருதலைப்பட்சமாக விசாரணை நடந்துள்ளது.

உதவிப்பேராசிரியரும், ஆய்வு மாணவரும் உயரதிகாரிகளா என்பதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விளக்க வேண்டும். காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர் அலுவலகம் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. கவர்னரின் செயலாளரே, கவர்னர் அலுவலக விவகாரங்களை கவனித்து வருகிறார். எனவே, உண்மையான குற்றவாளியான உயரதிகாரி யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அரசு கூடுதல் தலைமை வக்கீல், ஐகோர்ட்டு தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையிலேயே, மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கவில்லை. அவருக்கு ஜாமீன் வழங்குவது ஐகோர்ட்டின் விருப்பத்தை பொறுத்தது என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து வழக்கை வருகிற 11–ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story