ராஜபாளையம் அருகே பயங்கரம், பேராசிரியர் மனைவி கழுத்தை அறுத்து கொலை - மர்ம நபர் வெறிச்செயல்


ராஜபாளையம் அருகே பயங்கரம், பேராசிரியர் மனைவி கழுத்தை அறுத்து கொலை - மர்ம நபர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 6 March 2019 4:45 AM IST (Updated: 6 March 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த பேராசிரியரின் மனைவி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நக்கனேரியை சேர்ந்தவர் வைரவன் (வயது 45). இவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி அனிதா(42). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

வைரவன் தற்போது ராஜபாளையத்தை அடுத்துள்ள தென்றல் நகர் சாமந்திப்பூ தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் தினமும் பிள்ளைகளை பள்ளியில் தனது இரு சக்கர வாகனத்தில் இறக்கி விட்டு, பின்னர் கல்லூரிக்கு சென்று விடுவாராம். பகலில் அனிதா தனியாக இருந்துள்ளார்.

நேற்று மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் அனிதாவின் குழந்தைகள், அக்கம்பக்கத்தில் உள்ள மாணவர்களுடன் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீடு பூட்டியிருந்தது. அனிதாவை கூப்பிட்டு பார்த்தும் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அனிதாவின் மகனும், மகளும் அழத் தொடங்கினர்.

உடனே அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஓடிவந்து, வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கை அறையில் அனிதா கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

உடனடியாக இதுகுறித்து பேராசிரியர் வைரவனுக்கும், ராஜபாளையம் போலீசாருக்கும் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். உடனடியாக துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

வீட்டின் உள்ளே சென்று, அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். பகலில் வீட்டில் அனிதாவை தவிர வேறு ஆள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட மர்ம நபர், வீட்டின் உள்ளே புகுந்து அனிதாவை கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என தெரியவருகிறது.

எனவே அவரது வீட்டைப் பற்றி நன்கு அறிந்தவர்தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அந்த வீட்டில் இருந்து நகைகள் எதுவும் கொள்ளை போய் இருக்கிறதா? என்றும் விசாரணை நடக்கிறது.

எனவே தங்க நகைக்காக அனிதா கொடூரமாக கொல்லப்பட்டரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணங்களில் தொ டர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story