ரெயிலில் அடிபட்டு 2 தொழிலாளிகள் பரிதாப சாவு - மற்றொரு விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலாளி பலி


ரெயிலில் அடிபட்டு 2 தொழிலாளிகள் பரிதாப சாவு - மற்றொரு விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலாளி பலி
x
தினத்தந்தி 6 March 2019 4:15 AM IST (Updated: 6 March 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தை கடந்த 2 பேர் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தனர். மற்றொரு விபத்தில் சைக்கிளில் சென்ற காவலாளி அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் அருகே குனிச்சிமோட்டூரில் உள்ள கீழ்தெருவை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 60). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை திருப்பத்தூர் ரெயில் நிலையத்துக்கும் மொளகரம்பட்டி ரெயில் நிலையத்துக்கும் இடையே உள்ள பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சேலத்திலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு அந்த இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் ஏட்டு புஷ்பா, சம்பவ இடத்துக்கு சென்று பெரியண்ணனின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்தார். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்த பெரியண்ணனுக்கு காளியம்மாள் என்ற மனைவியும், மணி மற்றும் அருள் என்ற 2 மகன்களும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர்.

இதேபோல் ஆம்பூர் அருகே உள்ள வடபுதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் கர்ணன் (30). ஆடுமேய்க்கும் தொழிலாளி. நேற்று காலை 7 மணியளவில் பச்சகுப்பம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு பலியானார். இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் ஏட்டு உஷாராணி, சம்பவ இடத்துக்கு சென்று கர்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக அவர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் குருமன்ஸ் காலனியை சேர்ந்தவர் அர்ஜுனன் (60). இவர் திருப்பத்தூரில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவுப்பணிக்கு சைக்கிளில் சென்றார். நேற்று அதிகாலை வேலை முடிந்ததும் 4.15 மணியளவில் வீட்டிற்கு புறப்பட்டார். ஆசிரியர் நகர் பஸ் நிறுத்தம் அருகே சைக்கிளில் வந்து கொண்டிருந்த அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் சாலையின் நடுவில் விழுந்து படுகாயத்துடன் துடித்த அர்ஜுனன் அந்த இடத்திலேயே இறந்து விட்டார். அவரது உடல் நடுரோட்டிலேயே கிடந்தது. மின்னல் வேகத்தில் சென்ற வாகனங்கள் அவர் இறந்து கிடப்பதை கவனிக்காமல் உடல் மீது ஏறியவாறு சென்றன. இதனால் அவரது உடல் சின்னாபின்னமாகி கிடந்தது. உடலின் பல பாகங்கள் பல அடி தூரம் இழுத்துச்செல்லப்பட்டு இருந்தது.

காலை 6 மணி அளவில் அங்கு வந்த ஜோலார்பேட்டை போலீசார் உடலை சேகரித்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்ஜுனன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும், அதன் டிரைவரையும் தேடி வருகின்றனர். இறந்த இவருக்கு கனகா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

Next Story