காட்டு யானை தாக்கி முதியவர் பலி
கோவை அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலியானார்.
கோவை,
கோவை மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட எட்டிமடை அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 62). இவர் வீட்டு முன்பு கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்தார். நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று குட்டியுடன் அங்கு வந்தது. அந்த யானை கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த வேலுசாமியை, துதிக்கையால் தூக்கி வீசியது.இதில் அலறிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முதியவர் பலியாகி இருப்பது குறித்து வனத்துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்குவிரைந்து வந்தனர். அவர்கள் பட்டாசு வெடித்து காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினார்கள். பின்னர் வேலுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். முதியவர் இறந்தது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காட்டு யானை தாக்கி பலியான முதியவரின் குடும்பத்துக்கு முதற்கட்ட நிவாரண தொகையாக ரூ.50 ஆயிரத்தை வனச்சரகர் செந்தில்குமார் வழங்கினார். மீதி தொகை விரைவில் வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.எட்டிமடை அருகே காட்டு யானை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள் ளனர்.
Related Tags :
Next Story