சுடுகாட்டில் தொழிலாளி பிணம், குடிபோதையில் அடித்துக்கொன்ற வாலிபர் கைது
காரமடை அருகே சுடுகாட்டில் மதுஅருந்தும்போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரமடை,
காரமடை அருகே உள்ள பெரியபுத்தூர் சுடுகாட்டில் ரத்த காயங்களுடன் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காரமடை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவரின் உடலில் ரத்த காயங்கள் இருந்தது. இதனால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகத்தினர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டி (வயது 36) கூலி தொழிலாளி என்பதும், இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. இவர் அவினாசி ரோடு தென்னம்பாளையத்தில் உள்ள துணி கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் காரமடை போலீசார் ஒன்னிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக மொபட்டில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் பெரியபுத்தூரை சேர்ந்த தங்கராஜ் (23) என்பதும், இவர் தான் பாண்டியை அடித்துக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் தங்கராஜை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
சம்பவத்தன்று இரவு பெரியபுத்தூரில் உறவினர் வீட்டிற்கு பாண்டி வந்துள்ளார். அப்போது அவர் குடிபோதையில் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராசுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் சேர்ந்து அங்குள்ள சுடுகாட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது குடிபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ் அருகில் கிடந்த கட்டையால் தொழிலாளியை தாக்கியுள்ளார். இதில் கட்டையில் இருந்த ஆணி தலையில் பலமாக தாக்கியதால் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தங்கராஜ் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். பின்னர் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கி கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.
Related Tags :
Next Story