ஜெயலலிதா-ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல், கோவை ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த கோவை ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை,
சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணுக்கு ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அந்த நபர், சென்னை ‘போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அதே பகுதியில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரது வீடுகளில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது, அது சிறிது நேரத்தில் வெடிக்கும்.
முடிந்தால் தடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
உடனடியாக ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளுக்கு போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. அது வெறும் மிரட்டல் என்று தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சம்பந்தப்பட்ட செல்போன் எண் கோவையில் இருந்து வந்துள்ளதை கண்டறிந்தனர்.
அப்போது செல்போன் எண் முகவரியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது, போத்தனூர், பிள்ளையார்புரம் முகமது அலி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த முகவரியில் சென்று போலீசார் விசாரித்தபோது குறிப்பிட்ட முகவரியில் முகமது அலி இல்லை. போலியான முகவரியை கொடுத்து சிம்கார்டு பெற்று, அந்த எண் மூலம் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.எனவே சம்பந்தப்பட்ட ஆசாமியை கோவை போலீஸ் அதிகாரிகள் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story