கும்மிடிப்பூண்டியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை ரூ.1¾ லட்சம் சிக்கியது


கும்மிடிப்பூண்டியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை ரூ.1¾ லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 6 March 2019 10:15 PM GMT (Updated: 6 March 2019 7:54 PM GMT)

கும்மிடிப்பூண்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1¾ லட்சம் சிக்கியது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் ரெயில்வே மேம்பாலம் அருகே போக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு வாகன பதிவு, வாகன தகுதிச்சான்று உள்பட பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாகவும், இதற்காக தரகர்கள் பலர் தினமும் அங்கு சுற்றி வருவதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசிலும் புகார் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் இந்த அலுவலகத்திற்கு காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அதிரடியாக புகுந்தது. பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.93 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இது தவிர 3 தரகர்கள் உள்பட சிலரிடம் இருந்து ரூ.92 ஆயிரத்தையும் கைப்பற்றினர். மொத்தம் ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் சிக்கியது.

இதுகுறித்து லஞ்சஒழிப்பு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story