நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஆர்வம், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 18 ஆயிரத்து 646 பேர் விண்ணப்பம்
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 18 ஆயிரத்து 646 பேர் விண்ணப்பம் செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம், நிலக்கோட்டை ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இதில் 8 லட்சத்து 66 ஆயிரத்து 715 ஆண்களும், 9 லட்சத்து ஆயிரத்து 984 பெண்களும், 154 திருநங்கைகளும் என மொத்தம் 17 லட்சத்து 68 ஆயிரத்து 853 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால், விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதற்காக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்களை நடத்தவும் அறிவுறுத்தியது. அதன்படி கடந்த 23 மற்றும் 24-ந்தேதிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 114 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் ஆவலில், இளைஞர்கள் அதிக அளவில் வந்து விண்ணப்பம் கொடுத்தனர். அந்த வகையில் 23-ந்தேதி மொத்தம் 5 ஆயிரத்து 789 பேர் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பம் வழங்கினர். அதில் 2 ஆயிரத்து 836 பேர் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
அதேபோல் 24-ந்தேதி மொத்தம் 12 ஆயிரத்து 814 பேர் பெயரை சேர்க்க விண்ணப்பித்தனர். அதில் 5 ஆயிரத்து 797 பேர் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறப்பு முகாமுக்கு முன்பாக 43 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதன்மூலம் மொத்தம் 18 ஆயிரத்து 646 பேர் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதில் தகுதியான நபர் களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story