மதுரையில் பழிக்குப்பழியாக ரவுடி கொலை செய்யப்பட்டாரா? பரபரப்பு தகவல்கள்; 6 பேருக்கு வலைவீச்சு


மதுரையில் பழிக்குப்பழியாக ரவுடி கொலை செய்யப்பட்டாரா? பரபரப்பு தகவல்கள்; 6 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 March 2019 10:38 PM GMT (Updated: 2019-03-07T04:08:41+05:30)

மதுரையில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பழிக்குப்பழியாக நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை தொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

மதுரை,

மதுரை மேலஅனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் குமரன்(வயது 27), பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. இவர் சம்பவத்தன்று நண்பர் சந்தானத்துடன்(30) ஊமச்சிகுளம் பகுதியில் காரில் சென்றார். அப்போது, அப்போது ஆம்னி வேனில் வந்த ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை கார் மீது வீசினர். இதனால் காரில் இருந்த குமரனும், சந்தானமும் காரில் இருந்து இறங்கினர். அப்போது அந்த கும்பல் குமரனை மட்டும் ஓட, ஓட விரட்டி கொன்றுவிட்டு தப்பியோடியது.

இதுகுறித்து சந்தானம் அளித்த புகாரின்பேரில் ஊமச்சிக்குளம் போலீசார் போலீசார், கொலையில் தொடர்புடைய வில்லாபுரத்தை சேர்ந்த பிரேம்குமார்(27), பெரியண்ணகுமார்(30), குட்டை சரவணன்(27) உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2012–ம் ஆண்டு அக்டோபர் 30–ந்தேதி மதுரை ரிங்ரோடு, சிந்தாமணி அருகே தேவர் ஜெயந்தி விழாவுக்குப் போய்விட்டு திரும்பியவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அனுப்பானடி பகுதியை சேர்ந்த ராமர்(25), முத்துவிஜயன்(24) உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு கழித்து ஜாமீனில் வெளியே வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கடந்த 2013–ம் ஆண்டு டிசம்பர் 6–ந் தேதி மாவட்ட கோர்ட்டில் கையெழுத்து போட்டு விட்டு வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் காரை மறித்து, அதில் வந்த முத்துவிஜயன், மோகன், நாகராஜன், சோனையா உள்பட 8 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் முத்துவிஜயன் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை வழக்கில் தற்போது படுகொலை செய்யப்பட்ட குமரன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலைக்கு பழிக்கு, பழியாக இந்த குமரன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் முதலில் போலீசார் விசாரணை தொடங்கினார்கள்.

பின்னர் குமரனின் நண்பர் சந்தானத்திடம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். அதில் குமரனை வெட்டிய அனைவரும் தங்களுடன் இருந்தவர்கள் தான். ஏன் அவர்கள் குமரனை மட்டும் கொலை செய்தனர் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார். அவர் கூறிய அடிப்படையில் தான் பிரேம்குமார், குட்டை சரவணன், பெரியண்ணகுமார் உள்பட சிலர் அந்த சம்பவத்திற்கு வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் அவர்கள் எப்படி சம்பவ இடத்திற்கு வேனில் வந்தார்கள். அவர்களுக்கு சந்தானம் மூலம் எதுவும் தகவல் தெரிவிக்கப்பட்டதா? என்ற அடிப்படையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்து வருகிறது.


Next Story