மதுரையில் பா.ம.க. பிரமுகரின் சகோதரர் படுகொலை நண்பருக்கும் அரிவாள் வெட்டு
மதுரையில் பா.ம.க. பிரமுகரின் சகோதரர் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய நண்பருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
மதுரை,
மதுரை அவனியாபுரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் முனியாண்டி. அவருடைய மகன் மாரி (வயது 43). மீன் வியாபாரி. நேற்று இரவு இவர் தன் நண்பருடன் அம்பேத்கர் நகர் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மகும்பல் அவர்களை வழிமறித்தது.
அவர்களின் பிடியில் இருந்து மாரி மற்றும் அவரது நண்பர் தப்பிக்க முயற்சி செய்தனர். அவர்கள் சுதாரிப்பதற்குள் அந்த கும்பல், தங்கள் கைகளில் வைத்திருந்த அரிவாள், கத்தியால் அவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த மாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் போலீசார், படுகாயங்களுடன் கிடந்தவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலை செய்யப்பட்ட மாரி, பா.ம.க. பிரமுகர் ஒருவரின் சகோதரர் என போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.