எங்கள் அணிக்கு தே.மு.தி.க. வந்தால்தான் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்ற நிலை இல்லை தம்பிதுரை பேட்டி


எங்கள் அணிக்கு தே.மு.தி.க. வந்தால்தான் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்ற நிலை இல்லை தம்பிதுரை பேட்டி
x
தினத்தந்தி 7 March 2019 11:15 PM GMT (Updated: 7 March 2019 6:52 PM GMT)

எங்கள் அணிக்கு தே.மு.தி.க. வந்தால்தான் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்ற நிலை இல்லை என தம்பிதுரை கூறினார்.

புதுக்கோட்டை,

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் ஒன்றிய பகுதிகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பயனற்ற கூட்டணி, அந்த கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என்பது தான் எங்களது குறிக்கோள், அதற்காக தான் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். அ.தி.மு.க. பல தேர்தல்களில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டும் வெற்றி பெற்றுள்ளது.

எங்கள் அணிக்கு தே.மு.தி.க. வந்தால் தான் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்ற நிலையில்லை. இருப்பினும் தே.மு.தி.க. கூட்டணிக்கு வரவேண்டும் என்பதே எங்களது ஆவல். ஒரு கட்சி என்றால் தேர்தல் நேரத்தில் பல கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது என்பது வழக்கம். ஆனால் தே.மு.தி.க., தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறித்து துரைமுருகன் விமர்சித்திருப்பது அநாகரிகமான செயல், இதை வைத்தே தி.மு.க. எப்படிப்பட்ட கட்சி என்று தெரியவருகிறது. இவர்கள் வந்தால் மொழியையோ, இனத்தையோ காப்பாற்ற முடியாது.

மு.க.ஸ்டாலின் கற்பனையில் பேசி வருகிறார். மு.க.ஸ்டாலினால் அவர் வீட்டில் உள்ள பிரச்சினைகளையே தீர்க்க முடியவில்லை, நாட்டில் உள்ள பிரச்சினைகளையா அவர் தீர்க்கப் போகிறார். ஜெயலலிதா இருந்த போதிலிருந்தே பா.ஜ.க., அ.தி.மு.க. நட்புடன் தான் இருந்து வருகிறது.

இருந்தாலும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்ததால் தான் நானும் அவர்களை விமர்சனம் செய்தேன். மத்திய பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை. அ.தி.மு.க.வோடு விருப்பப்பட்டே பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது. விருப்பம் இல்லாமலா குமரிக்கு வந்த பிரதமர் மோடி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story