நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் பொங்கலூரில் நடைபெற்ற கூட்டத்தில் வைகோ பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் பொங்கலூரில் நடைபெற்ற கூட்டத்தில் வைகோ பேச்சு
x
தினத்தந்தி 9 March 2019 5:00 AM IST (Updated: 9 March 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று பொங்கலூரில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் வைகோ கூறினார்.

பொங்கலூர்,

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் ம.தி.மு.க. தேர்தல் நிதி அளிப்பு விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. விழாவுக்கு கட்சியின் அவைத்தலைவர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட துணைச்செயலாளர் முத்துரத்தினம் வரவேற்று பேசினார். புறநகர் மாவட்டச்செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி, முன்னாள் எம்.பி. கிருஷ்ணன், மாநகர செயலாளர் சிவபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் கட்சியின் தேர்தல் நிதியாக ரூ.55 லட்சமும், நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் ரூ.10 லட்சமும் என மொத்தம் ரூ.65 லட்சம் தேர்தல் நிதியாக பொதுச்செயலாளர் வைகோவிடம் நிர்வாகிகள் வழங்கினர்.

அதை தொடர்ந்து வைகோ பேசியதாவது:–

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையில் வெற்றி பெற கடுமையாக உழைக்கவேண்டும். 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றாலும் நாம் வெற்றியை நோக்கி பாடுபட வேண்டும்.

இந்த தேர்தலில் மத்திய, மாநில அரசுகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ரூ.ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் கொடுப்பார்கள். நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் சில கருப்பு ஆடுகளின் காவல்துறை வாகனங்கள் மற்றும் 108 ஆம்புலன்சிலும் பணம் கொண்டு செல்வார்கள். எவ்வளவு பணத்தை கொட்டிக்கொடுத்தாலும் அவ்வளவும் கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான்.

சிறு, குறு விவசாயிகளின் விவசாய நிலங்களின் வழியாக உயர் மின்கோபுரம் அமைத்து மின்சாரம் கொண்டு செல்ல முயற்சி நடக்கிறது. இதனால் 13 மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெரு நகரங்களின் வழியாக கேபிள் அமைத்து கொண்டு செல்லும்போது விவசாய நிலங்களின் வழியாக மட்டும் ஏன் கொண்டு செல்ல முடியாது.

மேகதாதுவில் அணைகட்டினால் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வராது. நீர் பாசனம் அடியோடு பாதிக்கப்படும். விளைநிலங்கள் விற்கவேண்டி வரும். நிலங்களை விலைக்கு விற்றால் எரிவாயு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து விட்டார்கள். தமிழகத்தை அழிக்க முற்பட்டு விட்டார்கள். நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் முல்லைபெரியாறு அணையும், இடுக்கி அணையும் இடியும். சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி உள்ளது.

இந்தி, இந்து, இந்து ராஷ்ட்டிரா இதுதான் பா.ஜனதா கட்சியின் கொள்கை. நாங்கள் மதங்களுக்கு எதிரிகளல்ல. மத்திய அரசுக்கு எடுபிடியாக மாநில அரசு செயல்படுகிறது. இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி அதிக பட்சமாக 130 இடங்களில் மட்டும் வெற்றி பெறும். மாநில கட்சிகளின் கூட்டமைப்போடு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும்.

நீங்கள் இன்று கொடுத்துள்ள ஒவ்வொரு ரூபாயும் ஒரு லட்சத்திற்கு சமமானது. 86 நாடுகளில் இருந்து தமிழர்கள் நமக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அந்த அந்த தொகுதியில் உள்ள கட்சியின் நிர்வாகிகள் வேறு தொகுதிக்கு செல்லக்கூடாது. அந்த தொகுதியில் தான் இருக்கவேண்டும். எனவே 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பல்லடம் பாலு, அகில்மணி, சுப்பிரமணியம், நல்லூர் மணி, நேமிநாதன், நாகராஜ், பொங்கலூர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொங்கலூர் ஒன்றிய செயலாளர் மணி நன்றி கூறினார்.

கூட்டம் முடிந்ததும் வைகோவிடம், சென்னையில் பிரேமலதா விஜயகாந்த், நிருபர்களை ஒருமையில் பேசியது குறித்து கேட்டபோது ‘‘ சிறுவயதினராக இருந்தாலும் அவர்களை மரியாதையுடன் அழைக்க வேண்டும்’’ என்றார்.


Next Story