கள்ளத்துப்பாக்கிகள் விற்பனையை தடுக்கக்கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி கேள்விகள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு
தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி விற்பனையை தடுக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி கேள்விகளை எழுப்பியது. இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
மதுரை,
மதுரை நாகனாகுளத்தை சேர்ந்தவர் கார்மேகம். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்ததாக சென்னை, திருச்சியில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய ஆயுத தடை சட்டத்தின்படி முறையான உரிமம் பெற்றவர்களே துப்பாக்கி வைத்திருக்கலாம். ஆனால் சமீபகாலமாக கள்ளத்துப்பாக்கி புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
வடமாநிலங்களில்தான் கள்ளத்துப்பாக்கி புழக்கம் அதிகம் இருந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. அதிலும் வட மாநிலங்களில் இருந்து ரெயில் மற்றும் பஸ்களில் கள்ளத்துப்பாக்கிகள் கடத்தி வரப்பட்டு, சில அரசியல்வாதிகள், வக்கீல்கள் உள்ளிட்டோருக்கு விற்பனை செய்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
ஆகவே, கள்ளத்துப்பாக்கி விற்பனையையும், புழக்கத்தையும் முழுமையாக தடுக்க இது தொடர்பான வழக்குகளின் விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றவும், அது குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
ஏற்கனவே இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கை குறித்து, மத்திய உள்துறை செயலாளர், தேசிய புலனாய்வு முகமை, சி.பி.ஐ. பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்தநிலையில் அந்த மனு நேற்று நீதிபதிகள் கிருபாகரன், ராமதிலகம் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சட்டவிரோத ஆயுதங்கள் பயன்படுத்தியதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அது தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர், அவர்கள் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் எத்தனை வழக்குகள் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.
மேலும் நீதிபதிகள், ‘‘சட்டவிரோத ஆயுத விவகாரங்களில் காவல்துறையினருக்கும் தொடர்புள்ளதாகவும் தெரியவருகிறது. தூத்துக்குடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிகாரியிடம் இருந்து 9 அமெரிக்க வகை துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த வழக்கின் நிலை என்ன? என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ எனவும் உத்தரவிட்டனர்.
மேலும், சட்டவிரோத ஆயுத வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை தாமாக முன்வந்து விசாரிக்கும் பொறுப்பை முறையாக செயல்படுத்துகிறதா? எனவும் கேள்வி எழுப்பினர்.
இந்தியா முழுவதும் சட்டவிரோத ஆயுதம் தொடர்பாக மாநிலம் வாரியாக எவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன? சட்டவிரோத ஆயுதம் தொடர்பான அந்த மாநிலங்களின் வரம்புகள் என்ன? என்பது குறித்த கேள்விகளுக்கு, மத்திய அரசு பதிலளித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கை வருகிற 21–ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.