தனுஷ்கோடி புதிய ரெயில் பாதையில் 4 ரெயில் நிலையங்கள் அன்வர்ராஜா எம்.பி. தகவல்


தனுஷ்கோடி புதிய ரெயில் பாதையில் 4 ரெயில் நிலையங்கள் அன்வர்ராஜா எம்.பி. தகவல்
x
தினத்தந்தி 10 March 2019 4:30 AM IST (Updated: 10 March 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி புதிய ரெயில் பாதையில் 4 ரெயில் நிலையங்கள் அமையஉள்ளதாக அன்வர்ராஜா எம்.பி. தெரிவித்தார்.

ராமேசுவரம்,

மதுரை மற்றும் ராமேசுவரம் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை ஏற்படுத்த ரெயில்வே துறை, மத்திய சுற்றுலா துறையுடன் இணைந்து பணிகளை மேற்கொண்டது. இதையடுத்து ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய வசதிகளை பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நீனு இட்டியேரா, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ், கூடுதல் ரெயில்வே கோட்ட மேலாளர் ஓ.பி.ஷாவ், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், கோட்ட வர்த்தக ஆய்வாளர் மணிகண்டன், கோட்ட பொறியாளர் பாஸ்கர், துணை பொறியாளர் மனோகரன், மூத்த பகுதி பொறியாளர் கண்ணன், ரெயில்வே பாதுகாப்பு படை செக்யூரிட்டி கமாண்டோ முகைதீன், ரெயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சவுத்ரி, துணை ஆய்வாளர் பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் அன்வர்ராஜா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:– ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு ரூ.208 கோடியில் ரெயில் பாதை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்பட தொடங்கும். இந்த புதிய ரெயில் பாதையில் ஜடாயு தீர்த்தம், கோதண்டராமர் கோவில், எம்.ஆர்.சத்திரம், தனுஷ்கோடி ஆகிய 4 இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கப்படும். இந்த ரெயில் போக்குவரத்து தொடங்கினால் தனுஷ்கோடி புத்துயிர் பெற்று சிறந்த சுற்றுலா தலமாக மாறும்.

மேலும் முக்கிய பகுதிகளுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் எனவும், சென்னை–ராமேசுவரம் இடையே முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் பகல் நேரத்தில் ரெயில் இயக்க வேண்டும் எனவும் ரெயில்வே துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இதேபோல ராமேசுவரத்தில் இருந்து மதுரை, பழனி வழியாக பாலக்காடு வரையிலும், ராமேசுவரம்–எர்ணாகுளம், ராமேசுவரம்–மும்பை இடையேயும் ரெயில் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். தூத்துக்குடியில் இருந்து சாயல்குடி, கீழக்கரை, ராமநாதபுரம் வழியாக உப்பூருக்கு புதிய ரெயில் போக்குவரத்து தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கோரிக்கைகளும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் முதற்கட்டமாக வெளி வளாகப்பகுதி அகலப்படுத்தப்பட்டு பயணிகள் எளிதாக ரெயில் நிலையத்துக்குள் சென்று வரும் வகையில் முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல பயணச்சீட்டு பதிவு அலுவலகத்திற்கு முன்பு பயணிகள் காத்திருக்கும் பகுதி, நடைமேடைக்கு செல்லும் குறுகலான நுழைவாயில் ஆகியவை அகலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரெயில் பயணம் குறித்த புதிய விசாரணை மைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் அலுவலகமும் காத்திருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. நடைமேடையில் உணவு மற்றும் சிற்றுண்டி கடைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த உணவு கடைகள் நவீன மயமாக்கப்பட்டுள்ளன. காலி தண்ணீர் பாட்டில்களை கையாளுவதற்காக நவீன எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது பயணிகள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் வழங்கிய 2 மின்கலத்தால் இயங்கும் வண்டிகள் உரியவர்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. புதிய நவீன உடைமைகள் காப்பு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராமேசுவரம் நகரத்தின் பண்பாட்டு பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் புகழ்பெற்ற அமர் சித்ர கதா நிறுவனம் வழங்கிய அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, ராமாயணத்தின் முக்கிய பகுதிகளின் 2 ஓவியங்கள் ரெயில் நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுஉள்ளன. இதேபோல குளிரூட்டப்பட்ட பயணிகள் ஓய்வறையில் கும்பகோணம் ஓவியர் ரமேஷ் தஞ்சாவூர் ஓவியப்பாணியில் வரைந்த ராமாயண காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.


Next Story