கணியாம்பூண்டி அருகே கதவை உடைத்து ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டு - மர்ம ஆசாமிகள் கைவரிசை
கணியாம்பூண்டி அருகே ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அனுப்பர்பாளையம்,
திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி ராமகிருஷ்ணாநகர் முதல் வீதியை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் (வயது 30). இவர் பாண்டியன்நகர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 6-ந்தேதி சங்கரேஸ்வரன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.
பின்னர் 2 நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்து போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது 2 பீரோவும் திறந்து கிடந்தன. அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன.
மேலும் பீரோவில் இருந்த அரை பவுன் கம்மல், தங்க நாணயம், வெள்ளி குத்துவிளக்கு, டம்ளர், வெள்ளி பாத்திரங்கள், மடிக்கணினி மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சங்கரேஸ்வரன் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று மர்ம ஆசாமிகளின் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் வீட்டில் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story