சுல்தான்பத்தேரியில், அட்டகாசம் செய்த காட்டுயானை பிடிபட்டது


சுல்தான்பத்தேரியில், அட்டகாசம் செய்த காட்டுயானை பிடிபட்டது
x
தினத்தந்தி 12 March 2019 4:00 AM IST (Updated: 12 March 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பத்தேரியில் அட்டகாசம் செய்த காட்டுயானையை வனத்துறையினர் பிடித்தனர்.

கூடலூர்,

தமிழக- கேரள எல்லையில் வயநாடு மாவட்டத்தில் சுல்தான்பத்தேரி உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக காட்டுயானை ஒன்று அட்டகாசம் செய்து வந்தது. மேலும் அப்பகுதியை சேர்ந்த 3 பேரை கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். 13 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் காட்டுயானைக்கு கொம்பன் என்று பெயரிட்டு வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அழைத்து வந்தனர். மேலும் அந்த காட்டுயானையை பிடிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் அந்த காட்டுயானையை பிடிக்க வனத் துறையினர் முடிவு செய்த னர். அதன்படி நேற்று காலை செம்பருத்திமூலா பகுதியில் நின்றிருந்த காட்டுயானைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர். அப்போது சிறிது நேரத்தில் காட்டுயானை மயக்க நிலைக்கு சென்றது.

இதையடுத்து முத்தங்கா சரணாலயத்தில் உள்ள 3 கும்கி யானைகளின் உதவியுடன் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு பிடிக்கப்பட்டு, வனத்துறை லாரியில் காட்டுயானை ஏற்றப்பட்டது. பின்னர் முத்தங்கா சரணாலயத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு காட்டுயானை கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏற்கனவே தயாராக வைத்திருந்த மரக்கூண்டில் காட்டுயானையை வனத்துறையினர் அடைத்தனர். இதனால் சுல்தான்பத்தேரி மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

Next Story