ஈரான் சிறையில் இருந்த 3 குமரி மீனவர்கள் விடுதலை


ஈரான் சிறையில் இருந்த 3 குமரி மீனவர்கள் விடுதலை
x
தினத்தந்தி 11 March 2019 11:00 PM GMT (Updated: 11 March 2019 9:21 PM GMT)

ஈரான் சிறையில் இருந்த 3 குமரி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு ஊர் திரும்பினார்கள்.

கருங்கல்,

குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த சகாய பீட்டர் (வயது 45), பொழிக்கரையை சேர்ந்த அமிர்தம் கார்மல் என்ற சுதர்சன் (43), மார்த்தாண்டம்துறையை சேர்ந்த கிறிஸ்து அடிமை (23) ஆகிய 3 பேர் சவுதி அரேபியாவில் தரீண் என்ற இடத்தில் ஜாப் அல்பரன் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 5 கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

அப்போது, அரேபிய நாட்டு கடலோர காவல் படைக்கும் கடற்கொள்ளையர்களுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் கடலோர காவல் படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் இறந்தார். அதைதொடர்ந்து 3 மீனவர்களையும் கொள்ளையர்கள் ஈரான் நாட்டுக்கு கடத்தி சென்றனர்.

அங்கு கடற்கொள்ளையர்களிடம் இருந்து ஈரான் அரசு மீனவர்களை மீட்டு சிறையில் அடைந்தனர். ஈரான் சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை மீட்க தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்தநிலையில் கடந்த 26-ந்தேதி ஈரான் அரசு 3 மீனவர்களை விடுவித்தது. தொடர்ந்து விமானம் மூலம் சென்னை வந்த மீனவர்களை தமிழக அரசின் மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் ஆறுமுகம், இணை இயக்குனர் ஜடு ஆம்ஸ்ட்ராங், தெற்காசிய மீனவர் தோழமை சர்ச்சில் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், மீனவர்கள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அங்கு மீனவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் விடுதலையாவதற்கு முயற்சி செய்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மாசுவராஜ், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள், தெற்காசிய மீனவர் தோழமை சர்ச்சில் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.

Next Story