அரக்கோணம் அருகே லாரியில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் டிரைவர் - போலீஸ் விசாரணை தீவிரம்


அரக்கோணம் அருகே லாரியில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் டிரைவர் - போலீஸ் விசாரணை தீவிரம்
x
தினத்தந்தி 12 March 2019 4:50 AM IST (Updated: 12 March 2019 4:50 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே கன்டெய்னர் லாரியில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் அதன் டிரைவர் காளி ராஜ் என்பது போலீஸ் விசாரணையில் அடையாளம் தெரிந்தது.

அரக்கோணம்,

அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நேற்று முன்தினம் அதிகாலை கன்டெய்னர் லாரியின் முன்பகுதி தீயில் எரிந்த நிலையில் இருந்தது.

தகவல் அறிந்தவுடன் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ் பெக்டர்கள் அமுதா, முத்து ராமலிங்கம், மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வை யிட்டனர். அப்போது லாரி யின் கிளனர் இருக்கை அருகே வாலிபர் ஒருவர் தீயில் கருகிய நிலையில் கரிக்கட்டையாக கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு லாரியை கடத்தி வந்து கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கன்டெய்னர் லாரியில் இறந்து கிடந்தவர் சிவகாசி பகுதியை சேர்ந்த டிரைவர் ஆனந்த் என்ற காளிராஜ் (வயது 26) என்பது தெரிய வந்துள்ளது. மேலும் மரபணு சோதனை, ரசாயன பரிசோதனை இவற்றின் முடிவு வந்த பிறகு இறந்தவர் காளிராஜ்தான் என்பது 100 சதவீதம் உறுதி செய்யப்படும்.

அவரை லாரியுடன் கடத்தி வந்து கொலை செய்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து ராமலிங்கம், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை போலீசார் ஸ்ரீபெரும்புதூர், சிவகாசி, சென்னை, காஞ்சீபுரம், இருங் காட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்பத்தகராறு காரணமாக கொலை நடந்ததா? அல்லது பணம் கொடுக்கல், வாங்கல், சொத்து பிரச்சினை, தொழில் போட்டி, பெண்கள் சம்பந்தப்பட்ட காதல் தொடர்பு காரணமாக செய்யப்பட்டதா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து காளிராஜின் அண்ணன் மற்றும் குடும்பத்தாரிடம் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் குற்றவாளி பிடிபடுவான். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story