கவுந்தப்பாடி அருகே ஏரிக்குள் ஸ்கூட்டி பாய்ந்தது, தண்ணீரில் மூழ்கி ஆசிரியை சாவு


கவுந்தப்பாடி அருகே ஏரிக்குள் ஸ்கூட்டி பாய்ந்தது, தண்ணீரில் மூழ்கி ஆசிரியை சாவு
x
தினத்தந்தி 13 March 2019 4:15 AM IST (Updated: 13 March 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, ஏரிக்குள் ஸ்கூட்டி பாய்ந்தது. இதில் தண்ணீரில் மூழ்கி ஆசிரியை இறந்தார்.

கவுந்தப்பாடி,

கவுந்தப்பாடி அருகே உள்ள ஆப்பக்கூடல் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 34). எலெக்ட்ரீசியன். இவருடைய மனைவி செல்வி (28). இவர்களுக்கு சஜீதா (7), அஸ்வின் (3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். செல்வி அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை கணவன்-மனைவி இருவரும் தங்களுடைய குலதெய்வமான, பி.மேட்டுப்பாளையம் அய்யனாரப்பன் கோவிலுக்கு ஸ்ட்டியில் சென்றார்கள். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார்கள். ஸ்கூட்டியை சவுந்தர்ராஜன் ஓட்டினார். செல்வி பின்னால் உட்கார்ந்து வந்தார்.

அய்யனாரப்பன் கோவில் அருகே உள்ள அனந்தசாகரம் ஏரிக்கரையில் ஒரு வளைவில் திரும்பியபோது, திடீரென ஸ்கூட்டி நிலை தடுமாறியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்தது.

ஸ்கூட்டியோடு ஏரியில் பாய்ந்த சவுந்தர்ராஜனும், செல்வியும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தார்கள். அந்த வழியாக சென்றவர்கள் அதை பார்த்து உடனே ஏரியில் குதித்து இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்கள். பிறகு ஒரு தனியார் ஆம்புலன்சை வரவழைத்து பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

அங்கு டாக்டர்கள் இருவரையும் பரிசோதனை செய்தார்கள். அப்போது வரும் வழியிலேயே செல்வி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சவுந்தர்ராஜனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பவானி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த செல்வியின் உடலை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. 

Next Story