தஞ்சை-திருச்சி இடையே 23-ந் தேதி மின்சார ரெயில் சோதனை ஓட்டம் இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்


தஞ்சை-திருச்சி இடையே 23-ந் தேதி மின்சார ரெயில் சோதனை ஓட்டம் இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 13 March 2019 10:45 PM GMT (Updated: 13 March 2019 7:41 PM GMT)

தஞ்சை-திருச்சி இடையே வருகிற 23-ந் தேதி மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதால் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயில் நிலையம் மிகவும் பழமைவாய்ந்தது. இதற்கு முன்பு தஞ்சை வழியாக தான் சென்னை போன்ற பகுதிகளுக்கும், தென்மாவட்டங்களுக்கும் ரெயில்கள் இயக்கப் பட்டன. அப்போது தஞ்சை வழித்தடம் தான் மெயின் லைனாக இருந்தது. நாளடைவில் திருச்சி- விழுப்புரம் இடையே அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு ரெயில்கள் அந்த வழியாக இயக்கப்பட்டன.

விழுப்புரம்-தஞ்சை வழித்தடம் 2-வது வழித்தடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சை வழியாக ரெயில்கள் இயக்குவது குறைக்கப்பட்டன. கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

தற்போது தஞ்சை வழியாக 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும், வேளாங்கண்ணி, திருச்சி, மயிலாடுதுறை, காரைக்கால், எர்ணாகுளம், திருநெல்வேலி, ராமேசுவரம், கோயம்புத்தூர், சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, திருச்செந்தூர், வாரணாசி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கும் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சை-திருச்சி இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அது பயன் பாட்டுக்கு வந்து விட்டது. இதையடுத்து திருச்சி-காரைக்கால் இடையே மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மொத்த தூரம் 153 கி.மீ.ஆகும். இதற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

தஞ்சை-திருச்சி இடையே இருவழிப்பாதை என்பதால் இரண்டு வழித்தடத்திலும் மின் மயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சை-திருச்சி இடையே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் கம்பிகள் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தஞ்சை ரெயில் நிலையத்தில் மின் கம்பங்களுக்கு இடையே மின் கம்பிகளை பொருத்தும் பணியில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

முதல்கட்டமாக தஞ்சை-திருச்சி இடையே மின்சார ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, வருகிற 23-ந் தேதி மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது என்றனர்.

Next Story