அ.தி.மு.க. நிர்வாகிக்கு சொந்தமான கயிறு தொழிற்சாலையில் பயங்கர தீ
உத்தமபாளையம் அருகே அ.தி.மு.க. நிர்வாகிக்கு சொந்தமான கயிறு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் கம்பம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் இளையநம்பி. இவருக்கு சொந்தமான கயிறு தொழிற்சாலை, உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் உள்ளது. இங்கு கயிறு தயாரிக்கப்பட்டு கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் தென்னை மட்டையை தனியாக பிரித்து, அதில் அழகு சாதன பொருட் கள் தயாரிக்கப்படுகிறது.
இந்த பொருட்கள் ஆஸ்திரேலியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று 28 ஊழியர்கள் வேலை செய்தனர். மதியம் 1 மணி அளவில் அவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென கயிறு தொழிற்சாலையில் தீப்பிடித்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சிறிதுநேரத்தில் மள, மளவென தீ பரவியது.
இதுகுறித்து உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தென்னை மட்டை, நார் மட்டுமின்றி தொழிற்சாலையில் உள்ள எந்திரங்களுக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு படையினர் தவித்தனர்.
இதனையடுத்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் வனராஜ் தலைமையில் தேனி, கம்பம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு படையினர் அங்கு வந்தனர். இதற்கிடையே தொழிற்சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது. 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் தென்னை மட்டை, நார், அழகு சாதன பொருட்கள், கயிறு, எந்திரங்கள் ஆகியவை எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு ரூ.1 கோடி வரை இருக்கலாம் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்மாற்றியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தொழிற்சாலையில் தீப்பிடித்தது தெரியவந்துள்ளது.
இதே போல் வீரபாண்டி அருகே உள்ள வயல்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 40). விவசாயி. இவர், மாடுகளை வளர்த்து வருகிறார். இதற்காக மாட்டு கொட்டகையின் அருகே வைக்கோல் படப்பு வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று அந்த வைக்கோல் படப்பில் தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் தீ மள, மளவென பரவியது. இதுகுறித்து தேனி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வைக்கோல் படப்பில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story