பர்கூர் அருகே, நார் தொழிற்சாலையில் தீ விபத்து - 30 தென்னை மரங்கள் வெப்பத்தால் கருகின


பர்கூர் அருகே, நார் தொழிற்சாலையில் தீ விபத்து - 30 தென்னை மரங்கள் வெப்பத்தால் கருகின
x
தினத்தந்தி 14 March 2019 4:00 AM IST (Updated: 14 March 2019 4:43 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயின் வெப்பத்தால் அருகில் உள்ள 30 தென்னை மரங்கள் கருகின.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ளது அத்திமரத்துபள்ளம் கிராமம். இந்த கிராமத்தில் முனுசாமி என்பவர் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென இந்த தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளி வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிய ஆரம்பித்தது.

தீ கொழுந்து விட்டு எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது தொடர்பாக பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னரே தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயின் வெப்பத்தால் அப்பகுதியில் இருந்த 30-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் கருகி சேதமடைந்தன.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு நிலைய வீரர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story