இழப்பீடு வழங்கக்கோரி காய்ந்த நெற்கதிர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள்


இழப்பீடு வழங்கக்கோரி காய்ந்த நெற்கதிர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள்
x
தினத்தந்தி 14 March 2019 5:17 AM IST (Updated: 14 March 2019 5:17 AM IST)
t-max-icont-min-icon

இழப்பீடு வழங்கக்கோரி காய்ந்த நெற்கதிர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்,

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் படி ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகளுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனவே விவசாயிகள் சங்க நிர்வாகிகளான ராஜா, சி.கே.தனபால், ஏழுமலை, வருணகுமார் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு கொடுக்க வந்தனர்.

அப்போது அவர்கள் காய்ந்து போன நெற்கதிர்களை கையில் கொண்டு வந்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். நாங்கள் மனு கொடுக்கப்போவதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த நெற்கதிர்களை அங்கேயே போட்டுவிட்டு உள்ளே சென்று பொது மேலாளர் விஜயகுமாரிடம் (நீதியியல்) மனு அளித்தனர்.

மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். பல ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் நாங்கள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். காவேரிப்பாக்கம், நெமிலி, களத்தூர், துரையூர், மகேந்திரவாடி, அரசங்குப்பம் உள்பட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட நெல் கதிர்கள் கருகி பதராக மாறிவிட்டது.

மேலும் வாழை பயிரிட்ட விவசாயிகளும் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே இதனை முறையாக சரியான முறையில் கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். கரும்பு ஆலைகளுக்கு கரும்பு வினியோகம் செய்த விவசாயிகளுக்கு நிலுவை தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை.

கால்நடைகளுக்கு தீவனம் இல்லாததால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் கால்நடைகளுக்கு தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம மக்களுக்கும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஆலங்காயம் ஒன்றியம் ஜவ்வாது மலையில் உள்ள வசந்தபுரம் கிராமத்துக்கு செல்ல சாலை வசதி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் கூறுகையில், நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம், வாழைக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் எங்களது கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றனர்.


Next Story