எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 387 பேர் எழுதினர்


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 387 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 14 March 2019 10:45 PM GMT (Updated: 14 March 2019 7:28 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 23 ஆயிரத்து 387 பேர் எழுதினர்.

புதுக்கோட்டை,

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 107 மையங்களில் தமிழ் தேர்வு நடந்தது. இதையொட்டி மாணவ, மாணவிகள் நேற்று மதியம் 1 மணியளவில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த தகவல் பலகையில் ஒட்டப்பட்டு இருந்த அறிக்கையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறையினை ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் மாணவ, மாணவிகள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

தொடர்ந்து மாணவர்கள் தேர்வின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தேர்வு நடக்கும்போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் 1.45 மணியளவில் மாணவர்கள் தேர்வறைக்கு சென்று, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தனர். பின்னர் 2 மணியளவில் வினாத்தாள்கள் அவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. பின்னர் 10 நிமிடங்கள் வினாக்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. 2.10 மணியளவில் விடைத்தாள்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வை எழுத தொடங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த 3 கல்வி மாவட்டங்களையும் சேர்த்து 12 ஆயிரத்து 119 மாணவர்கள், 11 ஆயிரத்து 810 மாணவிகள் என 23 ஆயிரத்து 929 மாணவ, மாணவிகள் மற்றும் தனி தேர்வர்கள் 312 பேரும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத இருந்தனர். இதில் நேற்று நடந்த தேர்வில் 23 ஆயிரத்து 387 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 542 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. இதேபோல தனித்தேர்வர்கள் 312 பேரில் 291 பேர் தேர்வு எழுதினர். மீதமுள்ள 21 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வில் துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க 185 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை கண்காணித்து வந்தனர். ஒரு மையத்திற்கு 2 கண்காணிப்பாளர்கள் வீதம் 107 மையங்களுக்கு 214 பேர் தேர்வினை கண்காணித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை முன்னிட்டு தேர்வு நடைபெறும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் தேர்வு மையங்களில் குடிநீர் வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. புதுக்கோட்டை தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி நேரில் சென்று தேர்வு மையத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா, ஆசிரியர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story