ஆசனூர், கேர்மாளம் வனப்பகுதியில் 3-வது நாளாக எரியும் காட்டுத்தீ - மின்இணைப்பு துண்டிப்பால் மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கின


ஆசனூர், கேர்மாளம் வனப்பகுதியில் 3-வது நாளாக எரியும் காட்டுத்தீ - மின்இணைப்பு துண்டிப்பால் மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கின
x
தினத்தந்தி 15 March 2019 4:30 AM IST (Updated: 15 March 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

ஆசனூர், கேர்மாளம் வனப்பகுதியில் 3-வது நாளாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. மின்இணைப்பு துண்டிப்பால் மலைக்கிராம மக்கள் இருளில் மூழ்கின.

தாளவாடி,

தென்னிந்தியாவில் மிக செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. இங்கு தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், பவானிசாகர், சத்தியமங்கலம், டி.என்.பாளையம் என மொத்தம் 7 வனச்சரகங்கள் உள்ளன.

இங்கு யானைகள், சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, குரங்கு ஆகிய வனவிலங்குகள் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த புலிகள் காப்பக பகுதிகள் தற்போது கடும் வறட்சி நிலவி உள்ளது. வனப்பகுதியில் உள்ள மரம் செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் போதிய அளவு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் ஊருக்குள் புகுவது தொடர் கதை ஆகிவருகிறது. தண்ணீர் இருக்கும் மாயாறு பகுதிக்கு வனவிலங்குகள் செல்ல தொடங்கி விட்டன.

எனினும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மீண்டும் காட்டு தீ பற்ற தொடங்கி உள்ளது. தாளவாடி அருகே கேர்மாளம் வனச்சரகத்திக்கு உட்பட்ட கெத்தேசால் வனப்பகுதியில் கடந்த 3 நாட்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி எரிந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து ஆசனூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் கேர்மாளம், ஆசனூர் வனத்துறையினரும் இணைந்து தீயை அணைக்கின்றனர். எனினும் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. தீ விபத்தில் மாவள்ளம் பிரிவு அருகே உள்ள 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான மரம் செடி கொடிகள் எரிந்து நாசம் ஆகின.

அதே போல் வனப்பகுதி வழியாக மலைக்கிராமங்களுக்கு செல்லும் மின்கம்பம், கம்பிகளும் தீப்பிடித்து எரிந்தது. இதில் மின்கம்பங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தன. மேலும் தீயில் கருகி மரங்களும் ரோட்டில் விழுவதால் மலைக்கிராமங்களுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மின்கம்பங்கள், மின்கம்பி சேதம் அடைந்ததால் நேற்று காலை முதல் மலைக்கிராமங்களில் மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டது. கெத்தேசால், பூதாளபுரம், காணக்கரை, காடட்டி, சுஜில்கரை, திங்களூர் போன்ற 15-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கின. எனவே மின்கம்பங்களை மாற்றி உடனே மலைக்கிராமங்களுக்கு மின்இணைப்பு வழங்க வேண்டும். தொடர்ந்து காட்டுத்தீ எரிந்து வருவதால் வனவிலங்குகள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story