பொள்ளாச்சி போன்று நாகையில் சம்பவம்: இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது


பொள்ளாச்சி போன்று நாகையில் சம்பவம்: இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 March 2019 11:15 PM GMT (Updated: 16 March 2019 8:02 PM GMT)

நாகையில் இளம் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகை,

நாகை மாவட்டம் வெளிப்பாளையம் வண்டிபேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் சுந்தர்(வயது 28). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வரும் இவர், நாகையை அடுத்த கீழ்வேளூர் அருகே உள்ள ஒரு செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடைக்கு அடிக்கடி சென்று தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்து வந்தார்.

இதனால் அந்த கடையில் வேலை பார்த்து வந்த 23 வயதான ஒரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சுந்தரின் நடத்தை சரியில்லாததால் அவருடன் பழகுவதை அந்த பெண் தவிர்த்து வந்தார். தன்னுடன் பழகுவதை அந்த பெண் தவிர்த்து வந்ததால் அடிக்கடி அந்த பெண் வேலை செய்யும் கடைக்கு சென்று சுந்தர் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் அந்த பெண் வேலையில் இருந்து நின்று விட்டார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுந்தர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை சந்தித்து தான் திருந்தி விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் காரைக்காலில் உள்ள அம்மன் கோவிலுக்கு செல்லலாம் என்று அந்த பெண்ணை அழைத்துள்ளார். இதை நம்பிய அந்த பெண், சுந்தருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் ஒரு கடையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய சுந்தர் குளிர்பானம் குடித்து விட்டு செல்லலாம் என்று அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

அதன்படி அங்குள்ள ஒரு கடையில் குளிர்பானம் வாங்கிய சுந்தர், அந்த பெண்ணுக்கு தெரியாமல் அந்த குளிர்பானத்தில் மயக்க மாத்திரையை கலந்துள்ளார். இது தெரியாமல் அந்த பெண் சுந்தர் வாங்கி கொடுத்த குளிர்பானத்தை குடித்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்தில் அந்த பெண் மயங்கி விழுந்துள்ளார். இதை தொடர்ந்து அந்த பெண்ணை சுந்தர் மறைவான இடத்துக்கு கொண்டு சென்று தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்துள்ளார்.

மறுநாள் அந்த ஆபாச படத்தை அந்த பெண்ணிடம் காண்பித்த சுந்தர், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண், சுந்தரை திட்டி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுந்தர் நேற்று முன்தினம் அந்த பெண்ணின் வீட்டுக்கு மீண்டும் சென்று தகாத வார்த்தைகளால் அந்த பெண்ணை திட்டியதுடன் அந்த பெண்ணின் ஆடையை கிழித்து, என்னை திருமணம் செய்யாவிட்டால் செல்போனில் உள்ள ஆபாச படத்தை எல்லோரிடமும் காட்டுவேன் என்று மிரட்டி இரும்பு கம்பியால் அவரை தாக்க முயன்றுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் சுந்தர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து அந்த பெண் கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.

புகார் கொடுத்த பெண்ணிடம் மட்டுமல்லாது பல பெண்களுடன் சுந்தர் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் அவர் பல பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டினாரா? என போலீசார், சுந்தரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய நிலையில் நாகையில் வாலிபர் ஒருவர் பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story