தஞ்சை மாவட்டத்தில் கோமாரிநோய் தடுப்பூசி முகாம் கால்நடைத்துறை இணை இயக்குனர் நேரில் ஆய்வு


தஞ்சை மாவட்டத்தில் கோமாரிநோய் தடுப்பூசி முகாம் கால்நடைத்துறை இணை இயக்குனர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 17 March 2019 3:45 AM IST (Updated: 17 March 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் கோமாரிநோய் தடுப்பூசி முகாமை கால்நடைத்துறை இணை இயக்குனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்,

கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயை தடுப்பதற்காக தமிழக அரசு காலநடை பராமரிப்புத்துறையின் சார்பில் அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போட உத்தரவிட்டுள்ளது. அதன்படி 16–வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி போடும் முகாம் கடந்த 15–ந்தேதி தொடங்கியது.

இந்த முகாம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 4–ந்தேதி வரை 21 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 3 லட்சத்து 73 ஆயிரம் கால்நடைகளுக்கு இந்த கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது.


தஞ்சையை அடுத்த ஏழுப்பட்டி கால்நடை மருந்தகத்துக்குட்பட்ட அற்புதாபுரம் கிராமத்தில் நடந்த முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் தமிழ்ச்செல்வன் நேரில் பார்வையிட்டு, கால்நடைகளுக்கு முறையாக தடுப்பூசி போடப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.

இதில் கால்நடை உதவி மருத்துவர் முகமதுசெரீப் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு கோமாரி நோய் தடுப்பூசியை போட்டனர். முகாமில் 250–க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஈஸ்வரன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையினர் கலந்து கொண்டனர்.

Next Story