நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதிதாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் கலெக்டர் தகவல்


நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதிதாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 March 2019 11:00 PM GMT (Updated: 17 March 2019 8:12 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதிதாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என கலெக்டர் அன்பழகன் தெரிவித்து உள்ளார்.

கரூர்,

கரூர் நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்கள் குறித்தும், தேர்தல் செலவினங்களை வரையறுப்பது குறித்தும் விளக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் கூறியதாவது:-

கரூர் நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் தனது வேட்புமனுவினை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டரிடமோ அல்லது முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட வழங்கல்் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியிடமோ வருகிற 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை (23, 24-ந்தேதி ஆகிய இரு நாட்கள் விடுமுறை) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பாளர்கள் வேட்புமனுவினை தாக்கல் செய்ய வரும் போது தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் போது வேட்பாளர்கள் தங்களுடன் நான்கு நபர்களை மட்டுமே உடன் அழைத்து வர வேண்டும்.

வேட்பாளர் தங்களது வேட்புமனுவினை படிவம் 2பி-ல் சமர்ப்பிக்க வேண்டும். படிவம் 26-ல் பிரமாண பத்திரத்தை முழுமையாக பூர்த்தி செய்து, நோட்டரி பப்ளிக் முன்பாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இதில் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள முதலீடுகள் பற்றியும் தெரிவிக்கவேண்டும். வேட்பாளர்கள் தங்களது பிரமாண பத்திரத்தை தெளிவாக எழுதியோ அல்லது தட்டச்சு செய்தோ சமர்ப்பிக்கலாம். பிரமாண பத்திரத்தில் அனைத்து தகவல்களும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்பாகவே, புதிதாக ஒரு வங்கி கணக்கு தொடங்கி அதன் மூலமாகவே தேர்தல் செலவுகளை செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டால், ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியே வங்கி கணக்குகள் தொடங்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஒரு முன் மொழிபவர் போதுமானது. மற்ற வேட்பாளர்களுக்கு 10 நபர்கள் முன்மொழியப்பட வேண்டும்.

ஒரு வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கலுக்கான கட்டணம் ரூ.25 ஆயிரம் ஆகும். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த வேட்பாளர்களுக்கு வேட்புமனுத் தாக்கலுக்கான கட்டணம் ரூ.12 ஆயிரத்து 500 ஆகும். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த வேட்பாளராக இருந்தால் சாதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர்கள் வேட்புமனுவை பெற்றுகொண்டதற்கான ஒப்புகை சீட்டினை (பாகம் 6) பெற்றுக்கொள்ள வேண்டும். சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் இடம், நாள் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பினை பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் செலவினங்களை குறிப்பதற்கான குறிப்பேடு பெற்றுக்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி முகவரை நியமனம் செய்த படிவம் 10-ஐயும், வாக்குச்சாவடி முகவர் நியமனத்தை ரத்து செய்ய படிவம்-11ஐயும் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதனைத்தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப்பிரதிநிதிகளிடமும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் ஆகும் செலவினங்கள் குறித்த பட்டியலை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கி விரிவாக எடுத்துரைத்தார்.

இந்தகூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சரவணமூர்த்தி (கரூர்), லியாகத்(குளித்தலை), மீனாட்சி(அரவக்குறிச்சி), மல்லிகா(கிருஷ்ணராயபுரம்) உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story