வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் இணையதளம் மூலம் பிரசார அனுமதி பெற வசதி
திருப்பூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் பிரசார அனுமதி பெற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து அனுமதி பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்துதல், ஊர்வலம் நடத்துதல், பேரணி நடத்துதல், தேர்தல் பணிமனை தொடங்குதல், வாகன அனுமதி, ஒலி, ஒளி அமைப்பு அனுமதி உள்ளிட்ட அனுமதியை எளிதாக பெறுவதற்காக இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வசதியாக சுவிதா என்ற கணினி மென்பொருளை இந்திய தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ளது.
விண்ணப்பிப்பவர்கள் தங்களுடைய இருப்பிடங்களில் இருந்தபடி அனுமதி கோரும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் பெறப்பட்டவுடன் தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியால் கோரிக்கை விவரம் தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டு துறைகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் முதலில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 24 மணி நேரத்துக்குள்ளாக அனுமதி வழங்கப்படும் வகையில் இந்த மென்பொருளில் வசதி செய்யப்பட்டுள்ளது.
அனுமதி அளிக்கப்பட்ட விவரம் குறித்து விண்ணப்பதாரரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.) மூலம் தகவல் கிடைக்கும். தகவல் வந்ததும் விண்ணப்பதாரர் எங்கிருந்து வேண்டுமானாலும் அனுமதி ஆணையை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த வாய்ப்பை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக தேர்தல் தனிப்பிரிவில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை உள்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அமர்ந்து பரிசீலனை செய்து அனுப்பி வைக்க உள்ளனர்.
இந்த சுவிதா மென்பொருள் மூலமாக அனுமதி வழங்குவது குறித்த பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் அதிகாரிகளுக்கு நடந்தது. திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், திருப்பூர் மாநகர துணை போலீஸ் கமிஷனர் உமா, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கீதா பிரியா, தேர்தல் தாசில்தார் முருகதாஸ் மற்றும் ஆர்.டி.ஓ.க்கள், தாசில்தார்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story