நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தொடக்கம்: கலெக்டர்-வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் ஏற்பாடுகள் தீவிரம்


நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தொடக்கம்: கலெக்டர்-வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 19 March 2019 4:30 AM IST (Updated: 19 March 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கப்பட இருப்பதால், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பெரம்பலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிப்பு, பொது இடங்களில் இருந்த கட்சி கொடி கம்பங்கள் அகற்றம், விளம்பர பதாகைகள் அகற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வரும் வேளையில், அரசியல் கட்சியினரும் தங்களது தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுபவர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது. இதையொட்டி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு 2 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான, கலெக்டர் சாந்தாவிடமும், பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும், வருவாய் கோட்டாட்சியருமான விஸ்வநாதனிடமும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

இதனால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வேட்புமனுதாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வேட்புமனுதாக்கல் செய்யும் அறை, ஊடக கண்காணிப்புக்குழு அறை, தேர்தல் பிரிவு அலுவலகம் என தனிதனியாக தேர்தலுக்கான அறைகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அறைகளுக்கு வேட்பாளர்கள் எளிதில் செல்லும் வகையில் தகவல் பலகைகள் ஏதும் நேற்று மாலை வரை வைக்கப்படவில்லை. மேலும் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு வருபவர்கள் 100 மீட்டருக்கு முன்னதாகவே தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்ற வகையில் எல்லைகோடுகள் வரையப்பட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர். மேலும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே, வேட்பு மனுதாக்கல் செய்யும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவர். மேலும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம். ஒரு வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கலுக்கான கட்டணம் ரூ.25,000 ஆகும். தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த வேட்பாளர்களுக்கு வேட்புமனு தாக்கலுக்கான கட்டணம் ரூ.12,500 ஆகும் என தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story